நான் வளர்மதியை வாசித்ததன் விளைவாக நினைவில் வருவன..

எனக்கென்னமோ இந்தக் கட்டுரையை எழுதுவது அவ்வளவு சுலபமான ஒன்றாகத் தெரியவில்லை. இந்த கதைக்கும் – எனக்கும் – என் மண்ணுக்கும் ஒரு பந்தம் இறுகப் பிணைந்துள்ளது. பிரதியை வாசிக்கின்ற பொழுதுகளில் ஏன் என் சித்தம் பேதலிக்கிறது. அப்படியொன்றும் பெரிதாக இல்லை என்று பல தடவை என்னை நானே தேற்றிக் கொள்ளும் மனநிலையில் இப்போது நான் இல்லை. நாடக அரங்கை நேசிக்கிற ஒரு கலைஞனாய் இந்தக் கட்டுரையை எழுத வக்கற்றுப் போகிறேன். ஏன் என்றால் நான் வளர்மதியின் தேசத்தான். “ஓ.. கடவுளே நான் எப்படி நினைக்க..? எப்படி மறக்க..”எங்கள் மண்ணும் அந்த நாட்களும்…

வளர்மதியைப்பற்றி எங்கிருந்து தொடங்கலாம்?ஒரு பெண் என்பதிலிருந்தா? அல்லது ஈழத்துப் பெண் என்பதிலிருந்தா? இங்கு பெண் -ஈழத்துப் பெண் இந்த இரண்டுக்குமான இடைவெளியை நிரப்பும் பணி உங்களைப் பொறுத்தது. அது அப்படியிருக்க, வளர்மதியை அரசியலில் தொடங்கலாமா?இல்லை இந்த சமூகம் மீதான தார்மீகக் கோபமுடைய , பிறர் ஈனநிலை கண்டு துள்ளும் ஒரு கலை ஆன்மாவிலிருந்து தொடங்கலாமா? எங்கிருந்து தொடங்கினும் எல்லாமும் ஒரு கறுப்பு வெளிச்சத்தில் காணாமல் போய்விடுகிறதே.

நிச்சயமாக அந்த கறுப்பு வெளிச்சத்திலிருந்தே தொடங்கலாம். நாடகமும் அப்படித்தான் தொடங்குகிறது. வளர்மதியைப் பேச, நிச்சயம் அவள் ஒரு பெண்ணாக இருக்கவேண்டிய அவசியமில்லை. வக்கிரங்களைப் பிரயோகிக்கும் கொடூர மனநிலைகளின் முன் அவள் ஒரு பெண்ணாக அடையாளப்படலாம். சமூகச் செருக்கும் இலட்சியப் பற்றுறுதியும் கொண்ட மனநிலைக்கு பால்பேதம் கிடையாது.என்ன செய்வது ஒப்பீட்டளவில் இந்த உலகு வக்கிரங்களால் நிரம்பி வழியும் அதிகார மணிமுடிகளைச் சூடியவர்களின் கைகளில் தானே சுழல்கிறது.அவளைப் பெண்ணாக பார்ப்பதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

ஞா.கோபி அவர்களின் “நான் வளர்மதி” நாடகத்தில் வருகிற வளர்மதிதான்  நிஜத்திலும் வளர்மதி. பாரதி சொன்ன புதுமைப் பெண்களை ஈழ தேசம் உருவாக்கிக் கொண்டிருந்த காலப்பகுதி அது. வளர்மதி போன்றவர்கள் அந்தக் காலத்தை வசப்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதை தயக்கமில்லாமல் சொல்லுமளவுக்கு அந்த நினைவுகள் பசுமையாய் இன்றும் எம் மனங்களில் உறைந்துள்ளது. போராட்டம் என்பது ஒரு குணம். அது ஆயுதங்களுக்கும் அப்பாற்பட்டதுதானே. அந்த மனவெழுச்சி ஒவ்வொரு தமிழ் மனங்களுக்குள்ளும் எரிந்து கொண்டிருந்த காலம் அது. வடிவங்களால் வேறுபட்டு எண்ணங்களால் ஒருமைப்பட்ட ஆரோக்கிய செயல்வாதம் எங்கள் மண்ணுக்கும் இருந்தது.

அதுவும் “வளர்மதி” நாடகச் சிந்தனை கொண்ட செயல்வாதி. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் மனம் வாடும் குணம் சமூக கலைஞர்களுக்கு உள்ளுக்குள் கலந்த பண்பு அல்லவா? வளர்மதி மட்டும் என்ன விதிவிலக்கா? அந்த வலுவுள்ள மனதோடுதான் கல்வியின் பொருட்டு தமிழ்நாடு வந்தவள்.

“நான் வளர்மதி” நாடகத்தின் ஆசிரியருக்கும்; வளர்மதிக்கும் தமிழ் நாட்டு கல்விச் சூழல் ஏற்படுத்திய நட்புறவும், மனக்கிடைக்கையின் உன்னத பகிர்வுகளும், வளர்மதியின் வாழ்வை தரிசிக்க ஆசிரியருக்கு ஏதுவாய் அமைந்திருப்பதை எழுத்துரு வெளிப்படுத்தி நிற்கிறது. அருகிருந்து வாழ்ந்த இரு அரங்கத் தோழமைகளின் சமூகப் புரிதலுக்கும், அநீதியின் பொருட்டு அந்த தோழமையின் இலட்சிய கனவு சிதைவுறும் நேரத்தில் தூரதேசத்திலிருந்து அங்கலாய்க்கும் ஆற்றா மனதின் ஆழ்துயரை ஆற்றுகையாக்கும் விளைவு அரங்கை ஆயுதமாக்கியுள்ளது.

நாடகத்தில் வெளிப்படும் சொற்களும்; வசனமும் போதுமாய் இருக்கிறது. ஆசிரியருக்கும் வளர்மதிக்கும் இடைப்பட்ட கலந்துரையாடல்களில் எவற்றையெல்லாம் வளர்மதி பகிர்ந்துகொண்டிருப்பாள் என்பதற்கு. மறுபுறம் பார்த்தால் ஒரு தோழனாய் அல்லது நாடக ஆசிரியனாய் வளர்மதியினூடாக ஈழத்து அரசியலையும் வாழ்வையும் எந்தளவுக்கு உணர்ந்துள்ளார் என்பதை, செம்மண், மருதமரம், நூலக எரிப்பு, சோதனைச்சாவடி, பறை,னுநயவா ஊநசவகைiஉயவந, அகிம்சைப் போராட்டம், பொட்டு, புத்தர், மூட்டை முடிச்சு, எல்லை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் “பாலியாறு” போன்ற சொற்கள் போதுமானதாய் அமைகிறது.

இந் நாடகத்தைப் பற்றி பேச இச்சொற்களைத் தவிர வேறு எதுவும் இப்போதைக்கு எனக்கு தேவைப்படாது என நினைக்கிறேன். இந்த சொற்களை வைத்து எங்கள் மண்ணில் நடந்த ஆயிரக்கணக்கான கதைகளை சொல்லமுடியும். செம்மண் நினைவுபடுத்தும் எங்கள் தெருவும், அந்த செம்மணி படுகொலையும், மருதமரம் தரும் வன்னிப்பிரதேசத்தின் தெருவும், சோதனைச்சாவடியின் அனுபவங்களும், பறைமேளத் திருவிழாவும், இறக்காதவர்களுக்கும் னுநயவா ஊநசவகைiஉயவந எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட எம் வாழ்வும், கொல்லப்பட்ட கணவனின் செய்தியறியாமல் நம்பிக்கையில் புலரும் ஒவ்வொரு காலையிலும் நெற்றியில் பொட்டு வைக்கும் பெண்களும், அகிம்சைப் போராட்டம் தோற்றுப்போன அரசியலும் இப்படிப் பல.. ஒவொன்றையும் தனியாக எழுதும் இடம் இதுவல்ல.

புத்தரின் பிள்ளைகளால் தோற்றுப் போன பௌத்த நெறியும், குண்டு வீழும் நேரமெல்லாம் மூட்டை முடிச்சுகளைச் சுமந்த கால் நடை பயணங்களும், எல்லையைக் காக்க, இழந்த எம் சோதரர்களையும், எல்லாவற்றுக்கும் மேலாய் பாலியாறு கண்ட வரலாறுகளையும் சொல்லி மாளாது.

கோபியிடம் இந்தச் சொற்கள் எப்படி வந்து மாட்டிக் கொண்டன என வியக்கிறேன். எதற்காக இந்தச் சொற்களை அவர் பாவித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்தச் சொற்கள் தரும் அர்த்தப்பாடுகளுக்கும் வலிகளுக்கும் ஒத்தடம் கொடுக்க இப்போதைக்கு என்னால் முடியவில்லை.

ஒவ்வொரு சொல்லும் ஈழத்தமிழரின் இன விடுதலைப் போராட்டத்திலிருந்து தவிர்க்கமுடியாதவைகள் -தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுதவும் முடியாது.

இப்போது எண்ணிப் பார்க்கிறேன் “நான் வளர்மதி” நாடகம் வளர்மதியின் சிறை உணர்வுகளை மட்டுமா பேசியது? நெடுங்கால நீட்சியின் பெரும் அரசியலை அல்லவா பேசிவிட்டுப் போயுள்ளது. இந் நாடகத்தில் வரும் புத்தர், நூலக எரிப்பு போன்ற சம்பவங்களின் நினைவுகள் நுஃமானின் கவிதையினை நினைவுபடுத்தி விடுகிறது.

நேற்று என் கனவில் புத்தபெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை தரித்த அரச காவலர் அவரைக் கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில் அமைச்சர்கள்வந்தனர்

எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை பின் ஏன்

கொன்றீர்? என்று சினந்தனர்.

இல்லை ஐயா தவறுகள் எதுவும் நிகழவே இல்லை.

இவரை சுடாமல் ஓர் ஈயினைக்கூட சுட முடியாது போயிற்று எம்மால்

என்றனர்.

தொடரும் கவிதையில்…

சிவில் உடையாளர்கள்புத்தரின் பிணத்தை உள்ளே

இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகத்தினால் புத்தரின் மேனியை

மூடிமறைத்தனர்

சிகாலோகவாதச் சூத்திரத்தை கொளுத்தி எரித்தனர்

புத்தரின் சடலம் அஸ்தியானது.தம்மபதமும் சாம்பலானது.

என்று முடிகிறது அந்தக் கவிதை.

ஈழத்தின் போர்ச்சூழலில் எழுந்த இலக்கியங்களில் போர் வாழ்வுடன் சார்ந்த ஊரும், பெயரும்,பொருளும் செல்வாக்கு செலுத்தியிருந்தது. “நான் வளர்மதியில்” ஆசிரியர் நினைத்தவொன்றைச் சொல்ல முயலும் போது ஈழ தேசத்திற்கும் சூழலுக்கும் பொருந்தும் அந்தச் சொற்கள் பல இடங்களை நினைவுபடுத்திவிடுகிறது. எப்படி சாத்தியமாயிற்று  இந்த குறிச்சொற்கள். அது படைப்பாளருக்கே உரித்தான அலை அதிர்வுதான். ஒரு வகையில் எம் வாழ்வோடு பயணப்பட்டு வந்த ஒவ்வொன்றும் அடையாளமாகிவிட்டது. நிலாந்தனின் கவிதையில் பாலியாறு இப்படி…

வண்ணத்துப்பூச்சிகள் கதிர்காமம்

போகும் வழிகளையெல்லாம்

அவர்கள் விடுவிப்பார்கள்

பாலியாற்றின் மெலிந்த தீரங்களில்

பழி கிடக்கும் மக்களை

அவர்கள் விடுவிப்பார்கள்

பறையும் உடுக்கும் சேர்ந்தொலிக்கின்றன….

... ஜெயபாலன் படைப்பில்

ஆனாலும் அமைதியாய்

பாலியாறு நகர்கிறது.

அந்நாளில் பண்டாரவன்னியன்

படை நடந்த அடிச்சுவடு

இந்நாளும் இம்மண்ணில்

இருக்கவே செய்யும்

என பாலியாறு பதிவாகிறது. பாலியாறு போலவே அருகே இருக்கும் மணலாறுக்கும்   இப்படி வரலாற்றுச் சம்பவங்கள் உண்டு. இன்று மணலாறு “வெலி ஓயா” எனும் சிங்களப் பெயரால் ஆக்கரமிக்கப்பட்டுள்ளது. அரசமரத்தடி பிள்ளையார் புத்தராக மாறிய அதிசயத்திலிருந்து நாம் மீளமுன் நாளை பாலியாற்றுக்கு என்னவாகுமோ தெரியவில்லை இப்படி படைப்புக்களிலேனும் வாழட்டும் எம் தேசத்தின் அடையாளங்கள்.

எமது அரசியலை வைத்து காய்நகர்த்தும்  உலக நாடுகளின் போலியை இன்னமும் எம் மக்கள் நம்புகிறார்கள் என்பதை நினைக்கும் போது பாவம் அவர்கள், இறக்கும் வரையும் வெள்ளந்தி மனிதர்களாகவே இறக்கப்போகிறார்கள். ஆசிரியரின் காட்சிப்படிமத்தில் சீட்டுக்கட்டுடன் அலையும் அந்த உலக  வல்லரசுகளை நோக்கித் தீர்வு தாருங்கள் என்று  புலம்பி வீணீர் வடியும் வாய்களுடன் வீதியில் கொடி பிடித்து அழுகின்ற மக்கள், நிறவெறியில் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட “ஜோர்ச் பிளோயிட்டின்”; கதையை இன்னுமே உணரவில்லை. நிறவெறி கொண்ட நாட்டிடம் தானே இனவெறியால் பாதிக்கப்பட்ட எமக்கான சர்வதேச விசாரணையை வேண்டிநிற்கிறோம்.

இந் நாடகத்தின் வசனங்கள் வலிமையானவை. பொதிந்து கிடக்கும் பொருள் தரும் உணர்வுகளைச் சம்பவங்களின் சாட்சிகளாக எஞ்சி நிற்கும் ஈழ தேசத்தவர்களின் பார்வையில் பல எண்ணவலைகளை உசுப்பிவிட வல்லன. இந் நாடகத்தினை அலசி ஆராய பலது இருப்பினும், இப்பிரதியின் வழியே உருவாகும் நினைவுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகவேனும் சொல்லிவிட உணர்வு முந்துகிறது.

தன் தேசத்திற்கு தேவையான அரங்கை செயல்படுத்தும் முனைப்புடன் தமிழ்நாட்டிலிருந்து கல்வியை முடித்து மீண்டும் தேசம் செல்லும் வளர்மதி தனக்கே உரித்தான போர்க் குணத்துடன் செயலாற்றும் காலப்பகுதியில்தான் அந்த சம்பவம் நிகழ்கின்றது.

தமிழ் மக்கள் மீதான வன்முறைகளும் நெருக்கடிகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காலத்தில் கருத்துச் சுதந்திரம் தடைப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் ஊடகமும் ஊடகவியலாளர்களும் அடக்குமுறைக்குள்ளிருந்து சரி – பிழைகளைப் பேசவேண்டிய இடர்மிகுந்த சூழ்நிலை காணப்பட்டது. அப்படியொரு காலப்பகுதியில் தான் ஜே. எஸ். திசைநாயகம் என்கின்ற ஊடகவியலாளரினால் எழுதப்பட்ட கட்டுரை இலங்கை அரசினை கேள்விக்குட்படுத்துவதாய் அமைந்திருந்ததாக சொல்லப்பட்டு கைது செய்யப்படுகிறார். இக்கட்டுரை வளர்மதியின் கணவரான ஜெசிகரனுடைய பதிப்பக்கத்தினால் வெளியிடப்பட்டதன் காரணத்தினால் வளர்மதியும் ஜெசிகரனும் கட்டுரையாளருக்கு உடந்தையானவர்கள் என்றும் இவ்வாறான செயற்பாடு தமிழ் தேசிய விடுதலை போராட்டத்திற்கு சார்பானது எனும் தொனியில் வளர்மதியும் அவருடைய கணவனும் கைது செய்யப்படுகின்றனர். இலங்கையில் “பயங்கரவாத தடைச்சட்டத்தின்”கீழ் நிகழ்ந்த முதல் கைது இது எனவும் பதிவாகிறது. இந்த சம்பவத்தின்பின் உள்ள அதிகாரம், அடக்குமுறை, ஜனநாயகம், சுதந்திர மனநிலை, ஒரு இனத்தின் இருப்பு, நீதித்துறையின் சமாந்திரத்தின் மீதான கேள்வி என்பவற்றை கேள்விக்குட்படுத்துவதாய் குமுறும் மனதின் வெளிப்பாடுகளாக இந்த நாடகம் பிறந்திருக்கிறது.

கருத்துச் சுதந்திரம், ஊடகம் சம்பந்தப்பட்ட அத்துமீறல்கள் எங்கள் மண்ணில் நூற்றுக்கணக்கானவைகள் உள்ளன. அவை கொடூரங்களினதும் கொடூரமானவைகள். வளர்தமதியைப் பேச கோபி துணிந்தார். ஏனையவைகளைப் பேச, எம் மண்ணில் இன்னுமே திராணியவற்றவர்களாய்த்தான் நாம் இன்னமும் இருக்கிறோம். இக்கதையைப் பொதுவெளியில் பேச இவ்வாசிரியருக்குக் கிடைத்த கருத்துச் சுதந்திரத்தின் அளவுக்குக் கூட வளர்மதியின் தேசத்திற்கு கிடைக்கவில்லையே.

பத்திரிக்கையாளர்கள் சுடப்படுதல் , கடத்தப்படுதல், காணாமலாக்கப்படுதல், அலுவலகங்கள் தீக்கரையாக்கப்படுதல், அடித்து நொறுக்கப்படுதல், குண்டு வீசப்படுதல், போன்றவை மிக சர்வசாதாரணமாக நாம் கண்டு கொண்டவைகள். ஊடகத் துறைக்கு மட்டுமல்ல, தன் சமூகம் மீதான பற்றுக் கொண்ட ஒவ்வொரு செயலாளிக்கும் பொருந்தும்.

“எனக்கு தெரியுது, இந்த மதிலுக்கு அந்தப்பக்கம் என்னோட னநயவா உநசவகைiஉயவந தயாராயிடுச்சி 12.05.2007 ல நான் கைதியானேன்” என வளர்மதியினூடாக ஆசிரியர் தரும் இந்த வசனத்தின் நிதர்சனத்திற்கு உதாரணம் எம்மிடம் நிறையவே உள்ளது.

நடுநிலையுடன் அரசின் அதிகாரப் போக்குகளையும் கறுப்பு பக்கங்களையும் வெளிக்கொண்டு வந்த சிங்கள ஊடகவியலாளர்கள் கூட கொல்லப்பட்டு காணமலாக்கப்பட்டும் உள்ளனர். இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வாக்கு மூலப் பதிவு இது. “மரணத்தின் பாதையை நான் அறிவேன்” என்ற தலைப்பில் “சண்டே லீடர்”பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரம துங்க எழுதிய ஆசிரியர் தலையங்கம்.

“ என் மரணத்தின் பாதையை நான் அறிவேன் நீ போலியான சத்தத்தை எழுப்பிக் கொண்டு போலீசை அழைத்து விசாரணை மேற்கொள்வாய். கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணையைப் போலவே இப்போதும் நடக்கும். ஆனால் ஒன்றும் வெளியில் வராது. நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று……

உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை  எந்தநேரத்திலும் உன்னால் மறக்க முடியாது. என் மறைவு சுதந்திரத்தை வீழ்த்தாது.இதற்காக போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும்”

எனத் தொடங்குகிறது. அந்த ஆசிரியர் தலையங்கம்.

2009 ஜனவரி 11ம் திகதி வெளியாகவிருந்த பத்திரிக்கைகாக இந்த தலையங்கத்தினை ஜனவரி 7ம் திகதி எழுதி வைத்திருந்தார். ஜனவரி 8ம் திகதி காலை லசந்த சுட்டு கொல்லப்படுகிறார்.

இதனை இங்கு சொல்ல வேண்டியதன் மனவுணர்வை என்னால் தடுக்க முடியவில்லை. இப்படி பல கதைகள்… ஒவ்வொரு சமூக புரட்சியாளனும் அவர்களின் முடிவு பற்றி அறிந்தே உரிமைக்காய் தம்மை இழந்தனர். அவ்வாறு தராக்கி சிவராம், சத்தியமூர்த்தி , நடேசன், நிமலராஜன், ரிச்சர்ட்டி சொய்சா, என நீள்கிறது. அந்த பட்டியல் 2005ம் ஆண்டிலிருந்து 2015க்குட்ப்பட்ட 10 வருட காலப்பகுதியில் 35க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதான விபரங்களும் அறியப்படுகிறது.

இங்கு “நான் வளர்மதி” நாடகம் இவற்றின் நினைவுகளை தொண்டைக்குழியில் சிக்க வைத்து அந்த சூழ்நிலைக்குள் வாழ்ந்த எமது வாழ்வனுபவங்களை மீட்டி ஆன்மாவை அந்தரிக்கச் செய்கிறது. 

இந்த நாடகத்தில் பின்னான சிறைக்காலம் தருகின்ற மன உணர்வும் சிதைக்கப்பட்ட வாழ்வின் கனவுகளையும, மனதுக்குள் ஓங்கி அறையும் வலியின் கோபத்தினையும் ஆசிரியர் சொல்லி விட்டார். அந்த சிறையிருப்பின் யதார்த்த உணர்வின் இன்னொரு பக்கத்தினை எந்த வரிகளால் சொல்லலாம். எல்லா சிறையிருப்புக்கும் கைதுக்கும், எல்லோரும் அறிந்த பொதுப்பண்பு ஒன்றுள்ளது என்றால, இலங்கையில் அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கைதும் சிறையும் தரும் அனுபவங்களை ஒரு சினிமா புரிதலாக கூட அறியமுடியாதளவுக்கு வக்கிரம் நிறைந்திருக்கும். எல்லோரும் எல்லாவற்றையும் அப்படியே பதிவு செய்துவிடுவதில்லை. இந்த பயங்கரவாத தடைசட்டம் ஒரு இனத்தின் மீதான வலைவிரிப்பாக இருப்பதுதான்  ஈழத்தமிழர் வரித்துக்கொண்ட சாபமாகியது. போர் ஓய்ந்த பின்பும் கூட தமது பிள்ளைகளின் கல்லறைகள் அடையாளங்கூட இல்லாமல் செய்யப்பட்டு அவர்களை நினைவுகூற மறுக்கப்பட்டிருக்கும் இக்காலத்தைதான் சமாதான காலம், நல்லிணக்க காலம் என பறைகிறார்கள்.

எத்தனையோ வளர்மதிகளை தேசம் விட்டு தேசம் புலம் பெயர வைத்தனர். இந்த மண் தன் பசளைகளை இன்றைக்கும் இழந்து கொண்டு தான் இருக்கிறது. “ நான் வளர்மதி” நாடகம் தமிழகத்தில் நடந்தேறியது. அண்டை தேசத்தில் உள்ள சக உறவுச் சமூகத்தின் பாடுகளை அரங்கின் வழியாக தந்த ஆற்றுகையாக அது வெளிவந்தது. 2009 மே 30ம் திகதி இந் நாடகம் மேடையேறுகிறது. 2009 மே 18 எங்கள் தேசத்தில் எல்லாம் முடிவுற்றாயிற்று. எல்லாம் என்றால்? எல்லாமும் தான். மக்கள் ஏதிலிகளாக தெருவில் நின்றார்கள். வைத்திய சாலை முற்றத்து வெளியில் எல்லாம் குருதிகள் பீறிடும் அரை உயிர் பிணங்கள் குவிந்து கிடந்தன. காணமலாக்கப்பட்டவர்கள், விதவைகள், தாய்தந்தையை இழந்தோர் என அந்த மே மாத காலத்தில் எமது தேசம் இருண்டு கிடந்தது. இன்னமும்தான் விடியவில்லை. அப்படியொரு காலத்தில் இப்படி ஒரு கதை கோபி அவர்களால் அரங்கேறியது எனும் போது, ஒரு காலத்துயரை அதே காலத்தில் ஆற்றிய பணியை நெஞ்சில் நிறுத்திக் கொள்கிறோம்.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்காகப் பிரதியை வாசித்தேன். இப்படி எழுதுவதாக தொடங்கவில்லை எனினும் “நான் வளர்மதி” தந்த உணர்வுகளை கட்டுரை உருவத்திற்கு மீறி நினைத்தவற்றையெல்லாம் புலம்புவதாய் அமைக்க வேண்டியதாயிற்று. இது ஒரு கழிவிரக்கம் தான் ஒரு ஆற்றுகை ஒரு பிரதி ஒரு அழகியல் என்பதைக் கடந்து கோபி அவர்களின் எழுத்தும் அது பேசும் பொருளும் ஆத்ம வலியை உண்டுபண்ணியது என்பதற்கான சான்று தான் இந்தப் புலம்பல். நினைந்தழுது நினைந்தழுது நினைவழியா நாட்களைச் சுமக்கின்ற இந் நேரத்தில் சேரனின் அக் கவிதை நினைவில் குத்துகிறது.

என்ன நிகழ்ந்தது

எனது நகரம் எரிக்கப்பட்டது

எனது மக்கள் முகங்களை

இழந்தனர்

எனது நிலம் எனது காற்று

எல்லாவற்றிலும்

அன்னியப் பதிவு.

கைகளைப் பின்புறம் இறுக்கிக் கட்டி

யாருக்காக காத்திருந்தீர்கள்?

முகில்கள் மீது நெருப்பு

தன் சேதி எழுதியாயிற்று

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து

எழுந்து வருக.

அருந்தவநாதன் பிரசாந்த், வவுனியா, இலங்கை

நாடகமும்… நானும்… (6)

கண்கள், முகம் மற்றும் குரல் வாயிலாக, ஒரு கதாபாத்திரம்  தன்னை வெளிப்படுத்துவதற்காக  வெகு சுலபமாக வழி காண்கிறது. கண்களால் வெளிப்படுத்த முடியாதவற்றை, வார்த்தைகள், பேச்சு, தொனியின் மூலம் குரல் வெளிப்படுத்துகிறது. நடிகரின் உணர்வுகள் மற்றும் சிந்தனையை, சைகைகள் மற்றும் உடல் அசைவுகள் வலுப்படுத்தி ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்கின்றன. உடல் சார்ந்த இந்த நடவடிக்கைகள், நடிகரின் படைப்புத் திறன் முனைப்பின் விளைவாக, இறுதியில் நிகழ்வாக முடிசூட்டப்படுகின்றன.

உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை, புலப்படக் கூடிய தசை அசைவுகள் இல்லாமல், கண்களும் முகமும் பேசும் மிகவும்  நுட்பமான மொழி, வெளிப்படுத்துகிறது. தசைகள், முழுமையாகவும் நேரடியாகவும் உணர்வுக்குத் துணை நிற்க வேண்டும். தன்னிச்சையாகவோ, இயந்திர கதியிலோ கண்கள் மற்றும் முகத்தின் தசைகள்—கோபம், பரவசம் அல்லது நடுக்கம் அல்லது திணிக்கப்படும் வேறுவிதமான உணர்வுகள் காரணமாக—இறுக்கமடையும்போது நுட்பமான, புலப்படாத ‘அந்த மொழி’ சிதைந்துவிடுகிறது.

எனவே, நுணுக்கமான பார்வை மற்றும் முக பாகங்களைத் தசைகளில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத அசைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஒரு நடிகர் முதலில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

                                                               –கான்ஸ்தன்தீன்  ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.

1982 ல் எனது குடும்பச் சூழ்நிலையின் காரணமாக  நான் நகரத்திலிருந்து விலகி சற்றுத் தொலைவில் வாழவேண்டி வந்தது. அந்த நேரத்தில் எனது ஸ்ருஷ்டி குழுவினர் எல்லோரும் நகரத்திலிருந்ததால் அவர்களோடு இணைந்து என்னால் நாடக ஆக்கங்களில் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது. மிகுந்த  வருத்தமும் மனச்சோர்வும் ஏற்பட்டபோதும் எதுவும் செய்யவியலாத கையறு நிலை. குடும்பச் சுமைகள் தொடர்ந்தன. பல முயற்சிகள் எடுத்தும் நான் தோற்றுப்போனேன்.  ஏறக்குறைய 20 ஆண்டுகள் எதுவும் இயங்க முடியவில்லை. அந்தக் குற்றவுணர்ச்சி இன்றளவும் எனக்குள்ளே இருந்து வருகிறது. அதன்பிறகு 2001ல் எனது கல்லூரித்தோழர்  ‘ஞானவேலு’  எனக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வேலையைச் செய்தார். அவர் பணிபுரிந்த இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ‘காட்சி தொடர்பியல் துறை’  மாணவர்களுக்கு நடிப்புக்கான  பயிற்சிப்பட்டறை நடத்தும்படி என்னை அழைத்தார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பிற்குள் வந்தேன். அந்த மாணவர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சிப்பட்டறை நடத்தினேன். அந்த நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கவும், தொடங்கி வைக்கவும்  ‘புவியரசு அண்ணா”வையும் அழைத்திருந்தேன். மிக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்த அந்தப்பட்டறை  நிகழ்வுக்குப்பிறகு அந்தக் கல்லூரியில் தொடர்ந்து எல்லா ஆண்டுகளும் பட்டறை நடத்தினேன். அதைத்தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளிலும் நாடகப்பட்டறைகளை நடத்திக் கொடுக்கும்படி கேட்டு அழைப்புகள் வந்தன. நாடகங்களை இயக்க முடியாத சூழலில் எனக்கென தனியாக ஒரு குழு இல்லாத நேரத்தில் ஏதோவொரு வடிவத்தில் நாடகம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளுக்குக் சென்று நிறைய மாணவர்களைச் சந்திக்கும்  வாய்ப்புக் கிடைத்தது.  அந்தப்பணி இன்று வரையிலும் தொடர்கிறது.

 இந்தச் சூழலில்தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோழர்கள் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பயிற்சிப்பட்டறை  நடத்தித் தரும்படி கேட்டார்கள். சிறுவர்களுக்கான பயிற்சிப்பட்டறையை  டாக்டர் வேலு சரவணன் அவர்களுக்கும் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு  நானும் பயிற்சி கொடுத்தோம். வேலு சரவணன் என்கிற மகத்தான கலைஞனோடு இணைந்து  பணியாற்றின அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாதது.  பயிற்சிப்பட்டறை முடிந்து அவரது மாணவர்கள் காரமடை அருகேயுள்ள பெட்டதாபுரம் என்னும் கிராமத்தில் அவரது ‘பல்லி, தேவலோக யானை’ நாடகங்களை நடத்தினார்கள். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களை வைத்து பேராசிரியர் திலீப்குமார் (இந்துஸ்தான் கல்லூரி) அவர்கள் எழுதின ‘ விடுதலை’ (ஏர்வாடி மன நலக்காப்பகத்தில் நடந்த தீ விபத்தைப் பற்றி ) என்கிற நாடகத்தை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வீதி நாடகமாக வெற்றிகரமாக நடத்தினோம். அடுத்த ஆண்டு  கோவை கோபால் நாயுடு மேல் நிலைப்பள்ளியில்  வேலு சரவணனோடு இணைந்து ஒரு நாடகப்பட்டறையையும் மிகச்சிறப்பானதொரு நாடகவிழாவையும்  நடத்தினோம்.

புவியரசு அண்ணா அவர்கள் அன்புத் தோழர் ராமராஜ் பற்றி என்னிடம் சொன்னார். கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகின்ற இளைஞர் ஒருவர் நவீன நாடகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நீங்கள் அவசியம் தொடர்பு கொள்ளுங்கள் என்று. அப்படித்தான் நான் தேடிச்சென்று அறிமுகம் செய்துகொண்டேன்.  அன்று முதல் இன்று வரை அன்புத்தோழர் ராமராஜுடன் நாடக செயல்பாடுகளில் பல்வேறு தளங்களில் செயல்படுகின்ற நல்லதொரு வாய்ப்பு அமைந்தது. இரண்டுமுறை அவரது மாணவர்களுக்குப் பயிற்சிபட்டறை நடத்தினதும்  அன்புத்தோழர் முருகபூபதி அவர்களின்  அறிமுகம் ஏற்பட்டது.  அவரது “மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி”, ‘’நீர் நாடோடிகள்” போன்ற நாடகங்களின் ஆக்கத்தின்போதும் அந்த  நாடகங்கள் அரங்கேறும்போதும்  உடனிருந்தது இனிமையான அனுபவங்களாக அமைந்தன. தரணி அவர்களின் ‘உடல்வெளி அமைப்பின் நல்ல நாடகங்களைக் காணவும் அந்தக் கலைஞர்களோடு அறிமுகமும் எனது தொடர்ச்சியான நாடக செயல்பாடுகளுக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தன. இப்போது ஆடியில் எனது நாடக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் அருமையானதொரு வாய்ப்பும் அமைந்தது.

இதற்கிடையில் சென்னையிலிருந்து நண்பர் ஒருவர் மூலமாக ஒரு அழைப்பு வந்தது. ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இலங்கைத்தமிழர் ‘நிருமலன்’ அவர்கள் ‘கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்’ திரையிட  “UNLOCK’’ (முல்லைத்தீவில் நடந்த இன அழிப்பில் சிக்கி சீரழிந்த  இளம் மாணவர்கள் பற்றின கதை) என்கிற குறும்படத்தை தயாரிக்கிறார்கள் அந்தப்படத்தில் நடிக்கும் பத்து சிறுவர்களுக்கு நடிப்புப்பயிற்சி கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். சென்னையில் ஏழு நாட்கள்  நடிப்புப் பயிற்சியும், தஞ்சையில் மூன்று  நாட்கள் படப்பிடிப்புமாக  மிகச்சிறந்த ஒரு அனுபவம் அமைந்தது.

அதன்பிறகு நான்  ‘விழுதுகள்’ என்கிற  குறும்படத்தை  எழுதி இயக்கி நடித்து வெளியிட்டேன். தொடர்ந்து ஒரு சில குறும்படங்களிலும்  நடித்தேன். என்றாலும்  நாடகங்களில் நடிக்கின்றபோது கிடைக்கின்ற அந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் குறும்படங்களில் நடித்தபோது கிடைக்கவில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பாரதியார் பல்கலைக்கழக மாணவர் ரெங்கபாண்டி என்பவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். தங்கள் கல்லூரி மாணவர்களுக்கு நாடகப்பயிற்சிப் பட்டறை நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அங்கு சென்றபோதுதான்  நித்யானந்தம் என்கிற  ஆராய்ச்சி மாணவரைச் சந்தித்தேன். அர்ப்பணிப்போடு செயல்படும் அவர் அங்கு எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். பலகலைக் கழகத்தில்  MJMCயின் துறைத்தலைவர் திரு P.E. தாமஸ் அவர்களின் அன்பும் வரவேற்பும் அடுத்தடுத்த  நகர்வுகளுக்கு மிகப்பெரிய துணையாக  அமைந்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வரும் மாணவர்களுக்கு  நடிப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதோடு ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிப்பட்டறை முடிந்ததும் ஒரு நாடகத்தை நிகழ்த்தவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். எல்லா நிகழ்வுகளிலும் உடனிருந்து எனக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தார். அங்கேயிருக்கின்ற அழகான அந்த “ஆம்ப்பி தியேட்டரில்” நாடகம் நடத்துவதென்பதே  ஒவ்வொரு நாடகக் கலைஞனுக்கும் உற்சாகமூட்டும் ஒரு அனுபவம்.

முதல் ஆண்டு என்னுடைய ‘கயிறு’ என்கிற நாடகத்தையும் (அதே நாடகத்தை பூசாகோ கலைக்கல்லூரி ‘நிலாமுற்றத்திலும் நிகழ்த்தினோம்) இரண்டாம் ஆண்டு ‘ பீ ராஜா’ என்கிற  நாடகத்தையும் (அதே நாடகம் தமுஎகசவின் 200வது இலக்கியச் சந்திப்பிலும்) மூன்றாவது ஆண்டு ‘புவியரசு அண்ணா’ அவர்கள் எழுதின  “சாக்கடைக் குழியில்  ஒரு மனிதன்” என்கிற நாடகத்தையும்  நிகழ்த்தினோம்.  அதன் பிறகு பல்கலைக்கழக நாடகப் போட்டியில் மாணவர்கள் மீண்டும் “பீ ராஜா” நாடகத்தை நடத்தி சிறந்த நாடகத்திற்கான பரிசைப் பெற்றார்கள்.  எனக்கென தனியாக ஒரு குழு இல்லாத   காரணத்தால். ஒவ்வொரு முறையும் கிடைக்கும் புதிய மாணவர்களை வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு நாடகமும் நடத்தினேன்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘கொரோனா பெருந்தொற்று’ ஏற்பட்ட காரணத்தால் எல்லா இயக்கங்களும் முடங்கிக் கிடக்கின்றன. எல்லாம் மாறி இயல்பு நிலை ஏற்பட்டு மீண்டும் உங்களோடெல்லாம் ஒன்றாக இணைந்து நாடங்களை உருவாக்க வேண்டும் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.  இதுவரை  ஏறக்குறைய ஆயிரம் மாணவர்களுக்கு  நடிப்புப்பயிற்சி கொடுத்துள்ளேன். என்னிடம் பயின்ற மாணவர்கள் இப்போது பல்வேறு நாடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும்,  ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் செயல்பட்டு வருகின்றனர். ஹிந்துஸ்தான் கால்லூரியில் என்னிடம் பயின்ற மாணவர் ‘ஸ்யாம் சூர்யா’ என்பவர்  ‘அக்னி தேவி’ என்கிற படத்தை இயக்கினார். இப்போது தனது இரண்டாவது திரைப்படம் ‘ஃப்ரண்ட்ஷிப்’பை இயக்கியுள்ளார்.

இவ்வளவு மாணவர்கள் நடிப்புப் பயிற்சி பெற்று பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருந்தாலும், நாடத்திற்கான செயல்பாடுகளில் பங்கெடுப்பவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள் என்கிற  உண்மையையும் உங்களோடு வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால் நாடகத்திற்கு மிகுந்த உடல் உழைப்பு தேவைப்படுகிறது,  நாடகத்தில் நிறைய பணமும், பெரும் புகழும் சம்பாதிக்க முடியாது அல்லவா? பொருளைத் தேடி அலைகின்ற இன்றைய உலகில்  அர்ப்பணிப்போடும், கலை தாகத்தோடும் செயல்படத் தயாராக வருபவர்கள் அபூர்வமாகவே உள்ளனர்.

 நன்றி! வணக்கம்!!

ரவிச்சந்திரன் அரவிந்தன்

கொரானா முகாமிற்கு வந்திருந்தார் சங்கரதாஸ்

காலம்  :

 அம்மைத்தொற்று இருந்த நாட்கள்.

இடம்

 ச.முருகபூபதி அவர்களின் மணல்மகுடி நாடக நிலம் , கோவில்பட்டி.

மணல்மகுடி நாடக நிலம் கோவில்பட்டியில் முருகபூபதியின் வீட்டின் முற்றத்தில் இயங்குகிறது. நடிப்பிடத்தின் நடுவில் ஒரு வேப்ப மரம்  , நிழல் இறக்கி அசைந்துகொண்டிருக்கும். அதனைச் சுற்றிலும்  நாடக ஒத்திகை, நாடகப் பேச்சு , கலை சார்ந்த பகிர்தல் என கலை இயங்கியல் கொள்ளும்.

ஒத்திகை நாட்களின் கதை – 1.

அவர்கள் “ மிருக விதூஷகம் ” நாடக ஒத்திகையில் இருந்தார்கள். குழுவில் ஒரு கலைஞருக்கு அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுப் போனது. அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்த்தொற்றுப் பிற கலைஞர்களுக்கும் பரவிவிடக்கூடாது. என்ன செய்யலாம் -பேசிக்கொண்டிருக்கும்பொழுது நோய்த்தொற்று பாதித்த கலைஞர் சிகிச்சைக்குச் செல்ல மறுக்கிறார். வெக்கை ஊர்க்காரக் கலைஞருக்கு அதை பெரும் நோயாக பாவித்துத் தன்னை நாடகத்திலிருந்து விலக்கிக்கொள்ள மனம் ஒப்பவில்லை. மூன்று நாளில் உடல் குளிர்ந்து போகும். நீங்கள் யாரும் அஞ்ச வேண்டாம் நான் என்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.  

கோணங்கி  கதவு நிலைப்படியில் அமர்ந்துகொண்டு இவர்களைப் பார்த்தபடியிருக்கிறார்.

 நாடக நிலம் குழப்பத்தில் இருந்தது.

வேப்ப மரத்தைப் பார்த்தபடி அந்தக் கலைஞர் உறுதியாகச் சொல்கிறார்.

“ யண்ணே நாடகம் முடிஞ்சிரிச்சி. ரிகர்சல் டைட்டாப் பேய்ட்டிருக்கும்போது என்னிய போவச்சொன்னா எப்பிடி.  நா ஒட்டாம இருந்துக்கிடுதேன். யாரும் பயப்பட வேணாம்ணே. ”

“ டேய் இவன் ஒருத்தண்டா. என்னத்தையாவது யோசிச்சுக்கிட்டு. நாங்க பயப்படல. ஒனக்கு சொகமாகணும்.” – முருகபூபதி.

“ என்னெய பத்தி கவலபடாதிய. அம்மெ இன்னிக்கா இருக்கு. யேண்ணே நீ வேற சலம்பிக்கிட்டு. மாரியாத்தாள நெனச்சி வேப்பங்கொழுந்த பறிச்சு போட்டுப் படுத்துக்கிடுதேன். காலையில் பச்சத்தண்ணிய ஊத்துனா சரியா போவும்”

கோமாளி முருகேசன் குறுக்கிட்டார்.

“ தாயளிக்கு ஒண்ணு ஆகாதுண்ணே. நைட்டு விபூதி பூசி விடுறேன். சரியா போவும். தாயளிக்கி இப்ப பாத்து  நோவு கண்டுருச்சி. என்ன செய்ய. மாரியாத்தாதாண்ணே. ரிகர்சல பாருங்க. எலேய் நீ இன்னிக்கு அங்கிட்டு கெட. சரியா போவும். எலேய் ரிகர்சல் மூடுக்கு வாங்கலே.என்ன சொல்றியெ..

  “ நீயும் நானும் ஒண்ணு

   ஒம்புருசம் வாயில மண்ணு…”

என்று சுதி ஏத்திப் பாட,

 கலைஞர்கள் மெல்லச் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பில் ரிகர்சல் மூட் பிறந்திருந்தது. ஆமண்ணே…ஒருத்தர் இல்லனா ஒடஞ்சி பேயிரும் . பாத்துக்கிருவம்ணே…….எல்லோரும் ஆமோதித்தார்கள்.

 நாடகமும் நாடக ஒத்திகைகளும் பித்துப் பிடித்த மன நிலையை உருவாக்கக் கூடியன. ஒத்திகை நாட்களில் படைப்பாக்க மன நிலை உணர்வெழுச்சியுடன் இருக்கும். அந்த உணர்வெழுச்சியில் கலைஞர்கள் எல்லோரும் நோய்மையை மறந்திருந்தார்கள்.

சிரிப்பலையில் கலைஞர்கள் அசைந்து இடம் மாறி அமர்ந்தார்கள்.

 “ சரியா இருக்குடா முருகேசா. பூபதி அவஞ் சரியாச் சொல்லிட்டான் . ஒண்ணும்பண்ணாது . அம்மெக்கி நாடகம் பிடிச்சு போச்சுடா முருகேசா..எப்பிடி …எப்பிடி ..ஏது..அம்மெக்கி , நாடகம் பிடிச்சி போச்சி…ஏது ”

என்ற கோணங்கிக்குக் ஆமண்ணே …ஆமண்ணே என்று கலைஞர்கள் உற்சாகமானார்கள் . ஒத்திகை தொடர்ந்தது. ஒத்திகையின் பெருவேகத்தில் நோய்மையை மறந்து தொற்று ஏற்பட்ட கலைஞரும் நடித்தார். மூன்று  நாட்கள் ஒத்திகைக்குப் பின்னர்தான் அறிந்துகொண்டார்கள்.

 ’ எல்லா கலைஞர்களுக்கும் அம்மைப் பிடித்திருந்தது’.

உடல்களில் கொப்புளங்கள் நீர்மை கொண்டிருந்தன. வெக்கை அவர்களைச் சூழ்ந்திருந்தது. களைப்பைச் சூடிய உடல்கள் ஓய்வை மறுத்தன. அவர்கள் நோய்மைக்கான மருந்தென ஒத்திகையை முன்மொழிந்தனர். வெக்கையிலும் பெருவலியிலும் உறக்கத்திலும் வந்த அனத்தல், நாடகவசனமாகவே இருந்ததை  பெரியவயல் எழுதிய  எம்.எஸ்.சண்முகம் கூறினார்.

 அம்மைத் தொற்றால் கொப்புளங்களாகக் குமிழ் கொண்ட உடல்கள் நடித்தபொழுது  வெடித்து நீர்ப் பீய்ச்சியது. கொப்புளங்கள் வெடிக்கும் சத்தம் மொட்டு விரிவதாய்  நாடகப் பின்னணி இசையானது. வலியில் சுகம் கண்டார்கள். உடலெனும் பெருமந்திர ரகசியத்தை அதன் வெளிப்பாட்டை ஒத்திகை உணர்த்தியபடி இருந்தது. இறுதி ஒத்திகை முடிந்து நடிப்பிடத்தில் மவுனமாய் அமர்ந்திருந்தபோது அம்மை வெளியேறியிருந்தது.

இது ஒரு அனுபவம்.

கொரானா பெருந்தொற்றும் சங்கரதாஸ் சுவாமிகளும்.

கொரானா பெருந்தொற்று கலைஞர்களை , கலைச்செயல்பாடுகளை நிறுத்தியது. கலைஞர்கள் பலரும் தொற்றிற்கு பலியானார்கள். பலருக்கும் தெரிந்த எழுத்தாளார்கள் , கலைஞர்களுகுத் தொற்று ஏற்பட்டால் உடனே ஊடகம் இரக்கம் கொள்கிறது. ஆனால் எத்தனையோ நாட்டுப்புறக் கலைஞர்கள் நாடகக் கலைஞர்கள் நோய்த்தொற்றில் பலியாகியுள்ளனர். நிராதரவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில்  நான் கொரானா நோய்த்தொற்றில் கொரானா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன். தனிமையில் நாடக நினைவுகளும் நாடகப்புகைப்படங்களுமே  எனக்கு மருந்தாக இருந்தன. துயர நாட்களில் செப்டம்பர் 7  தமிழ் நாடக மூதாதை சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாள் வந்தது. அந்த நாளின் நினைவுகள் நோய்மையை சங்கரதாஸ் சுவாமிகளை  மனதிற்குள் எழுதிப்பார்த்தது. முகாமில் படுத்திருந்த கொரானா நோயாளிகளின் இருமும் உடல்கள் காய்ச்சல் கண்டு வெளிறிய உடல்கள் அச்சம் பீடித்து சுருண்டு படுத்திருந்த உடல்கள் மெதுவாக இடுப்பைப் பிடித்தபடி நடக்கும் உடல்கள் , வீட்டை நினைத்து அழுதிருக்கும் உடல்கள், நீல வண்ணத்தில் முழுதும் மூடிய செவிலியர் உடல்கள்   என  நோய்மை உடல்கள்  அசைந்தபடியிருந்தன.  அந்த உடல்களின் இயக்கம் நாடக நிலத்தினை, மேடையை நினைவூட்டியது. உலகின் மொத்த மனிதர்களும்

தங்கள் துயரத்தை உடலுள் ஏற்று மிகப்பெரிய மைதானத்தில் உருண்டு மவுனமாய்க் வாயசைப்பது போன்றதொரு சித்திரம் எழுந்தது. எனது நாடகத்திற்கான பிரதியை மனம் வருவித்துக்கொண்டே இருந்தது.

 நாடகத் தயாரிப்பிற்கும் நடிகர்களுக்குமான சூழல் சரியாக இல்லாத ஊரடங்கு காலத்தில் கொரானா முகாமிற்கு சங்கரதாஸ் சுவாமிகள் வந்திருப்பதாக மனம் நம்பியது. நோய்மையில் இருக்கும் உடல்களை அவர் என்ன செய்வார் என நினைத்துப்பார்ப்பது வலியை மறக்கச்செய்தது. மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாம்பல் அட்டையில் கவிதைபோல எழுதினேன். எனக்கான மருந்து, சாம்பல் அட்டைக்குள் இல்லை ,அட்டைக்குமேல் நான் எழுதுவதில் இருக்கிறது என்பதையறிந்தேன்.

சங்கரதாஸ் சுவாமிகள் நோயாளிகளுக்கிடையில் ஆடிப் பாடிக்கொண்டிருந்தார். கோமாளியாகி   நாடக நிலத்திற்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார். 

கொரானா முகாமில் நான் சந்தித்தக் கூத்துக் கலைஞர் என் மருத்துவர் போல இருந்தார். அவரது உடல் அசைவுகளில் கூத்தின் நடையும் ஓட்டமும் குடி கொண்டிருந்தன. தங்கள் குழுவில் சிலருக்கு ஏற்பட்ட தொற்று குறித்து , முகத்தில் ஒரு கையை வைத்தவாறு இப்படிச் சொன்னார்.

“ எனக்கொண்ணுமில்லீங் கண்ணு… ஆனா என்னய புடிச்சுட்டு வந்துட்டாங்க. இந்தக் கொரானா நாளுல பட்னிகெடந்தோம். சாமி கண்ண தொறந்தாப்ல  நாமக்கலுல கூத்துப் பேசினாங்க கண்ணு. அபிமன்னன் வேஷம் கட்டுவேன். வாத்தியாரு சொல்லி வுட்டுருந்தாருகண்ணு. நெம்ப சந்தோசமாகி துணிமணியெல்லாம் எடுத்து வச்சிருந்தேன். சலங்கைய தேடீட்டுருக்கப்போ போன் பண்ணீட்டாங் கண்ணு. உங்களுக்கு கொரானாவாமானு பக்கத்தூட்டுப் பையஞ்சொல்லிச்சு. அட என்னிது . டவுனுக்குப் போய்ட்டு.. பஸ்சுல வந்தப்போ டெஸ்ட் எடுத்தாங் கண்ணு. அது தப்பாப் போச்சு. இப்ப இங்க புடிச்சுட்டு வந்துட்டாங்க ..” என்று கூத்து வசன வேகத்தில் சொல்லி முடித்தார்.

முகாமிற்கு நான் எடுத்துச் சென்றிருந்த புல்லாங்குழலை அவரிடம் தந்தேன். வாசிக்க ஆரம்பித்தார். முகவீணையில் வரும் இசை  புல்லாங்குழலில் முகாமை நிறைத்தது.

இந்நேரத்திக்கெல்லாம் வேசங்கட்டீட்டுத் தயாராய் இருந்திருப்போம். இப்பிடியாகிப்போச்சு கண்ணு ….என்று பெருமூச்செறிந்தார். எனக்கு எங்கோ  கூத்துக் களத்தில் பாடும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

அவர்களது கதையையும் எழுதிப்பார்த்திருக்கிறேன்.

இவை எழுதப்பட்ட வடிவம் கவிதையாகியுள்ளனவா என்று தெரியாது.

 நோய்மைகொண்ட உடல்கள் சொல்லும் நாடகக் கதை.

(1)

     தொற்று

ஒவ்வொரு ஊர்க்காரனுக்கும்

அந்தந்த ஊரின்

 மண்சிலைமுகத்தை

வழங்கியிருந்தது.

வெளியேறும் மூச்சும்

குளிர் நடுக்கமும்

இருமலும் கொண்ட

ஒவ்வொரு உடலும்

பெருநாடகமொன்றை

நிகழ்த்திக் கொண்டிருந்த

மேடையைக் கண்டு நின்றவர்

நெளியும் உடல்களில் இருந்து

உதிரும் மண்ணைச் ‌

சேகரித்தார்

உடல்களைப் பிடித்து

கோணல்களாக்கும்

சிற்பியாக வந்திருந்தார்

சங்கரதாஸ்

நடிப்புக் களத்தில்

நல்ல அறுவடை.

பெருந்தொற்று முகாமில்

ஒப்பனைப்பையுடன் நிற்கும்

அவரைக் கண்டு

வெளியேறுகின்றன

நோய்மைப் பூச்சிகள்.

………………………………………………………………………………………………………

(2)

அணைக்கட்டுக் கற்சுவரில்

நீரின்

தளும்புதல்களும் தண்மையும்

தெரிவதாக

முகக்கவசத்திற்குள்

துடிக்கும் உணர்வுகளைக் கண்டு

ஒவ்வொரு உடலையும்

தொட்டுத் தொட்டுப் போனார்

சங்கரதாஸ்.

தள்ளி நில், தொடாதே,தீட்டு

சத்தமிடும் சனாதனம்

பெருந்தொற்றில்

பிணக்குவியலானதை

இசைநாடகப் பாடலைப்

பாடி அறிவிக்கும்

அந்த நாடகக்காரின் கண்களில்

தெரிந்தது

கரங்கள் அகல விரித்து

அணைத்துக்கொள்ளும்

நாடக நிலம்.

……………………………………………………………………………………………………….

(3)

ஓஓஓஓ……….பெருஞ்சத்தமெழுப்பி

நோயுடல்களின் வட்டத்திற்குள்

நின்றவர்

மிரர் – இமேஜ்

நடிப்புப் பயிற்சியைத் தொடங்கினார்.

சங்கரதாஸ் பிம்பமாகி

நோயாளிகள் கண்ணாடியாகியிருந்தனர்

இருமினார்

மூச்சுவிடத் திணறினார்

தரையில்  நெளிந்தார்

கபம் கட்டிய நெஞ்சைப்பிடித்து

இருமியவர்

குரல் பயிற்சி என்றார்

பிம்பம் – கண்ணாடி வேறுபாடுகளற்று

நிகழ்ந்துகொண்டிருந்த நடிப்பு

பாசிடிவ் என வந்தது

இசை நாடகப் பாடலை பாடியபடி

கொரானா முகாமிலிருந்து

நாடகநில மருத்துவமனைக்குப்

பயணமானார்

சங்கரதாஸ்

கலைஞர்களின் பின்பாட்டுடன்.

……………………………………………………………………………………………………….

(4)

 நட்சத்திரங்கள் ஒளிர்ந்த இரவின்  தொடக்கத்தில்

 அண்டங்கிடுகிடுங்க ஆகாசம் நடு நடுங்க

“ நான் யார் தெரியுமா …

 என் பெற்றோர் யார் தெரியுமா….

 சுழன்றாடியவரின் வியர்வைத் துளிகள்

 மண்ணை நனைத்திருந்தன.

      “ சொன்னாத்தானே தெரியும் ..

        கேலியாகக் கேட்டக் கோமாளிக்கு

        விழுந்தது சாட்டையடி….சட்டீர் சட்ட்டீர்…

        அய்யோ யம்மா எனக் குதித்தக் கோமாளியும்

 “ சரி சொல்லு ங்கொப்பா ஆரு ங்ங்ங்ங்கோ…..”

 “ என்னடா ஓஓஓ……இழுக்குற…….சட்டீர் சட்டீர்

       சாட்டை பின்பக்கத்தைப் பதம் பார்க்க

 “ இல்ல இங்கொப்பா ஆரு ங்ங்கொம்மா ஆரு னு

       சொன்னாத்தானே தெரியும்..”

 அப்படிக்கேளு…….

       “ ஆஆஆஆகாச பூமியெல்லாஆஆஆம்

         ஒளியாய் இருக்கும் சூரியனார் எந்தனப்பா……” என்று பாடி

         வலக்கை கொடுப்பது இடக்கை அறியாத

         ராஜன் வந்தேன் கர்ண மகாராஜன் வந்தேன்…..ஓஓஓஓ ”

என்று  இரவு முழுதும் ஆடினார்.

நட்சத்திரங்கள் அழிந்துபோன காலையில்

குத்தவைத்து அமர்ந்தவாறு 

காசு இன்னைக்கேத் தந்துருவாங்களா

   “ ஊட்ல பிள்ளைக்குப் பொண்ணுபாக்க வராங்க

    போறப்ப வெறுங்கையோட போனா

    கொன்னுறுவா பொஞ்சாதி…..பாத்து பண்ணச்சொல்லு ”

    தரகரிடம் கை நீட்டி நிற்கிறார்

    கர்ணன்..”

……………………………………………………………………………………………………….

(5)

“ ஊட்ல பழைய சொட்டர் இருந்தா கொடுங்…”

கணேசன் வாத்தியார்,

 “  நிலமதிர ஆடும் கூத்துக்கலைஞருக்கு

    தலையாட கரங்கள் விரல்களாட

    மிருதங்கம் வாசித்தார்

                 தருமன் துயரத்திற்கு

                 கொகாலு வாசிக்கும்போது

                 கண்கள் பனித்தார்

  வனப்பிரவேசக் காட்சிகளில்

  கஞ்சிராவில் லயித்திருந்தார்

                  சில காசிகளுக்குக் கைகள் தட்டி

                  கோரசில் உரக்கப் பாடிக்கோண்டிருந்தார் – அவரே

துரியோதனனாகி குதித்தாடியபோது

பெருமரம் அசைந்ததைக் கண்டார்கள்.

                கூத்து முடிந்து மக்கள் கலைந்துகொண்டிருக்கையில்

                தன் அழுக்கு வேட்டியைப் போர்த்தியபடி நின்றிருந்தவரிடம்

                ஊர்க்காரர்

                 “ என்ன கணேசா அமர்க்களப்படுத்திட்டே போ..”

                வணக்கமுங் என நெளிந்தார்

                   “ புள்ளகுட்டி நல்லாருக்கா ” என்றதும்

அஆனுங் நல்லாருக்குதுங்

டேய் அய்யாவுக்கு வணக்கஞ்சொல்லு

பீமா , குந்தி என்றழைத்தபடி

போர்த்தியிருந்த வேட்டியை விலக்கினார்

கணேசனின் இரண்டு கால்களையும்

பீமனும் குந்தியும் கட்டிக்கொண்டிருந்தனர்

குளிரில் நடுங்கியபடி..”

……………………………………………………………………………………………………….

(6)

ஊரடங்குத் தளர்வின்

முதல் கூத்தில்

ஆடைகளும் வாளும்

கிரீடங்களுமாக

அத்தினாபுரம் எழுந்தது.

முகவீணையும் மிருதங்கமும்

இரவை சூடேற்ற

பதினெட்டாம் நாள் போர்

கர்ஜனைகளும்

ஆவேசப் பேச்சுமாக

ராஜாக்களும் ராணியரும்

கிராமத்தை அலங்கரித்தார்கள்.

கூத்து முடிந்து

கருமம் செய்த துரியனுக்கும்

தருமம் செய்த முதல்வனுக்கும்

ஜெயமங்களம்……

மங்களம்ம் மங்களம்ம்,,,,,,என்ற

மங்களப்பாடலின் போதே

கூத்திடத்திற்கு

ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

“ கோமாளிக்கலைஞனுக்கு கோவிட் தொற்று ”

 “ எல்லாருக்கும் டெஸ்ட் எடுக்கணுங்க

   இங்கெயே எடுத்துக்கலாம்

   இவர மட்டும் இப்பவே கூட்டிட்டு போறோம்.”

உடல்மூடிகள் பேசினார்கள்.

“ ஏங்க மேக்கப் எல்லாம் அப்புறம் கலைச்சுக்கோங்க.

  தள்ளி நில்லுங்க மொதல்ல..

  வண்டிகிட்டெ வந்து நாக்க நீட்டிட்டுப் போயிருங்க.”

ஒப்பனையுடன்

மவுனமாய் நடந்து போய்

ஆம்புலன்சில் ஏறினார்

இரவைச் சிரிப்பாக்கித் துள்ளிய

கோமாளிக்கலைஞன்.

கோவிட் முகாமில்

ஜல் ஜல் ஜல்  ஜல்

இசைந்துகொண்டிருக்கிறது

கோமாளியின் கால் சலங்கை.

– ராம்ராஜ்

உங்களை நீங்கள் எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் ?

தான் யார் என்பது மனிதர்கள் காலம் காலமாக க் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விதான். இந்த கேள்வியானது நிரந்தரமாக நமக்குள் இருக்கக் கூடியதொன்றே. தனிமனித அடையாளம் என்பது சமீப காலமாக மிகவும் பரவலாகப் பேசப்படக் கூடிய ஒரு தலைப்பாகும். கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து, மேற்கத்திய சிந்தனையில் வந்த மாற்றம் தனிமனிதவாதம். இப்பொழுது அந்த சிந்தனை தனிமனித அடையாளத்துக்குள் அடி எடுத்து வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

மனிதனுக்கென்று தனி அடையாளம் இருக்கமுடியுமா ? தனக்கான அடையாளம் என்பது தன்னைச் சுற்றி இருக்கும் “material condition “மற்றும் சக மனிதர்களின் இடையே இருக்கும் உறவை பொறுத்துதான் அவனது அடையாளமானது அமைகிறது. சுயம்பாகவோ, தான்தோன்றியாகவோ மனிதன் இருக்கமுடியும் என்றால் அது வெறும் புராணக்கதையாக தான் இருக்கமுடியும். அடிப்படையில் மற்றவர்கள் இல்லாமல் நம்மால் வாழ இயலாது. ஜீன்- பால் சார்ட்ரே சும்மா சொல்லவில்லை “நரகம் என்பது மற்றவர்கள் தான் என்று”. 

உங்களை நீங்கள் எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் ? என்ற ஒரு தனிமனித நாடகம் பார்க்க வாய்ப்பு அமைந்தது. ஆனந்த் சாமி மற்றும் ராஜீவ் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த நாடகம் ஒரு “work in progress ” ஆக இருக்கக்கூடிய ஒன்றாகும். நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கும் கதையாகும். “sizwe bansi is dead  ” என்னும் ஒரு தென் ஆப்பிரிக்க நாடகத்தை தழுவி எழுதப்பட்டதொன்றாகும். தென் ஆப்பிரிக்காவில் இன ஒதுக்கல் (1948-1998) காலகட்டத்தில், வேலை தேடிச் செல்லும் அனைத்து கறுப்பின மக்களும் தன் கையில் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் இருந்தது. அட்டையில்லாதோர் கேம்ப்களில் அடைக்கப்பட்டனர். இதே போல், இரண்டாம் உலகப்போரின் போது, யூதர்களின் மேல் ஒரு நட்சத்திரம் அடையாளமாகக் குத்தப்பட்டது. அடிமைகளாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட கறுப்பின மக்களின் மேல், அடிமை என முத்திரை குத்தப்பட்டது… இப்படி ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அவ்வளவு தூரம் போகாமல், நம் தமிழ்நாட்டிலேயே பார்க்கலாம். பள்ளிக்கூடம் போகும் குழந்தையின் கையில் சாதியை வெளிப்படுத்தும் நிறங்களில் கயிறுகளை கட்டிவிட்ட சம்பவம் நியாபகம் இருக்கும்.

இப்படி அடையாள அட்டையின் அரசியல் காலம் காலமாக  ஒடுக்கப்பட்ட மக்களைத் துரத்தி வருகிறது. இருபத்தோராம்  நூற்றாண்டு இதற்கு விதி விலக்கல்ல, இன்னும் தீவிரமாக அதை முன்னெடுத்துச் செல்கிறதே தவிர அதை இன்னும் தாண்டி செல்ல முடியவில்லை.

இன்றைய அரசியல், பொருளாதார மற்றும் சுகாதார சூழ்நிலையில் இருந்து பார்க்கும்போது இந்த நாடகமானது  மிகவும் முக்கியமான கேள்விகளை நம் முன்னால் வைக்கிறது. உலகமே பெருந்தொற்றின் கைப்பிடியில் மாட்டிக்கொண்டு அலைகிற நேரத்தில், ஆத்மநிர்பர் எனும் தத்துவத்தில் வாழப் பழகிக்கொள்ளச் சொல்லும் நேரத்தில், உலகில், நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் அத்துமீறல், தொழிலாளர்கள் உரிமை அத்துமீறல் என ஏகப்பட்ட அத்துமீறல்கள் தினமும் நடந்து வருகின்றன. இவைகள் அனைத்தும் நாம் கண் சிமிட்டும் நேரத்தில் இந்த நாட்டில் நடந்துவருகிறது என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும் பெரிதாக என்ன நடந்து விடப் போகிறது என்னும் ஒரு அசட்டு தைரியம் நமக்குண்டு. 

இப்படி அசட்டு தைரியத்தில் தூங்குவோரைத்  தட்டி எழுப்புகிறது இந்த நாடகம். இந்த நாடகம் மொத்தமாக 3 பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். ஒரு மனிதனின் வாழ்க்கை வட்டமாக, முடிவு ஆரம்பமாக, ஆரம்பம் முடிவாக தொடங்குகிறது. பல கனவுகளோடு ஊரை விட்டுச் செல்லும் ஒரு இளைஞனின் கதை தான் இது. சாமி, சொல்வது போல ஆவிகளாய் இந்த நாட்டில் திரிந்து கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கதை. அம்மா, பெயர் இல்லா இளைஞன், அவனது நண்பன், அவனுக்கு வேலைகொடுக்கும் ஸ்டுடியோ ஓனர் குழந்தை , இப்படியாக நிறைய கதாபாத்திரங்கள் நிறைந்து இருக்கும் இந்த நாடகம், பெயரில்லா கதாநாயகனைச் சுற்றி வருகிறது.  சாமியின் கதை கூறும் திறன் இந்த மனிதனை ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைக்கிறது. அதைப் பார்க்கும் நமக்குள்ளும் ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. அவரது நடிப்பு, நம்மை அந்த பெயரில்லா நாயகனோடு நெருக்கமாக பயணிக்கச் செய்கிறது.

அவனது வாழ்க்கை எங்கே தொடங்குகிறது  எங்கே முடிகிறது என்பது பார்ப்பவர்களுக்குக் கேள்வியை எழுப்புகிறது. சுழற்சியாக அவனது வாழ்க்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவதை சாமி மிகவும் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். அதுவும் ஒரு தனி மனிதனாக இருந்து அனைத்து கதாபாத்திரங்களையும் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார்.

அதே போல் இன்றைய இந்தியச் சூழலில் ஒரு மனிதன் தன் அடையாளத்தைத்  தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆதார் அட்டை இல்லை என்றால் பள்ளிக்கூடத்தில் இன்று மதிய உணவு இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒரு அட்டை மக்களின் வாழ்வை ஆட்டிப் படைக்கிறது.  அப்படி அட்டை இல்லாத ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என அட்டை வைத்திருக்கும் நமக்குத் தெரியுமா ? அவனுக்குள் ஊடுருவும் பயம் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? மூட்டை பூச்சிகளை நசுக்குவது போல் முதலாளித்துவமும் ஆளும் அரசாங்கங்களும் உழைக்கும் மக்களை நசுக்கி சுரண்டிப் பெருத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தப் பெயர் தெரியாத இளைஞனின் குரல் நம்மைத் தட்டி எழுப்புகிறது. இந்த நாடகத்தின் வெற்றி பார்வையாளர்களாகிய நம்மை உணரவைப்பதில் இருக்கிறது. 

1 . பிங்கோ கார் கம்பெனி 

ஒரு கார் தயாரிக்கும் சீன தொழிற்சாலையில் உற்சாகமாக வேலைக்குச் சேரும் நம் கதாநாயகன் சில நாட்களில் தோய்வுறுகிறான். ஒண்ணுக்குப் போகக்கூட நேரம் இல்லாமல் வேலை பார்க்கும் அவன் ஒரு நாள் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து பயந்து போகிறான். ‘இந்த கண்ணாடியில் தெரியும் இந்த உருவம் தன்னுடயது தானா?’ என கேள்வி எழுப்புகிறான். இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் முன்னதாகவே அந்த வேலையில் இருந்து தப்பி ஓடுகிறான். 

2 . கண்காணாத ஊரில் கூலித்தொழில் 

ஆடுகளை ஏற்றிச் செல்லும் வண்டியைப் பார்த்திருப்போம். அப்படி கூட்டம் கூட்டமாக வேலைக்கு ஆட்களை ஏற்றி ஒரு வண்டி தமிழ்நாட்டில் இருந்து எங்கோ கிளம்புகிறது. மூச்சுவிடக் கூட இடம் இல்லாத அளவுக்கு நெரிசல், வியர்வை, பயம் எல்லாம் கலந்த காட்சி அது. சாமியுடன்  நாமும்  அந்த வண்டியில் சிக்கி கொண்ட ஆட்டை போல உணரமுடிந்தது.

மொழி, ஊர்ப்பெயர் தெரியாத ஒரு இடத்தில் பல அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் இடத்தில் இவனுக்கு வேலை. எறும்பு புத்து கட்டுவது போல் ஊரெங்கும் அடுக்குமாடிக் கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் வேலைபார்க்கும் இடமானது நம் கண் முன்னே கொண்டுவருகிறார் சாமி. யார் இவர்கள் ? நாம் தினம் தெருவில் போகும்போதும் வரும்போதும் வேலைபார்க்கும் தொழிலாளிதான். நம் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலே இருக்கும் இவர்களை அச்சுறுத்துவது அடையாள அட்டை. 

‘அட்டை இல்லையா? அப்போ உங்களின் கதி கேம்ப் தான். நீங்கள் யாரென்று நிரூபிக்க முடியவில்லையா அப்பொழுது நீங்கள் போகவிருக்கும் இடம் கேம்ப் தான்.’ ரொம்ப வேகமாக ஒரு நகரத்தின் அடையாளத்தைத் தனது உழைப்பினால் மாற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இல்லையெனில் கேம்ப் தான் ஒரே இடம்…. இப்படியாக ஒரு சுழற்சிக்குள்ளே இருந்து இன்னொரு சுழற்சிக்குள்ளே தள்ளப்படும்  நமது கதாநாயகனுக்கு ஒரு நாள் ஒரு அட்டை கிடைக்கிறது, தெருவில்  கிடக்கும் ஒரு பிணத்தின் பையில் இருந்து.  புது அடையாளம், இனி பயம் இல்லை. எங்கு வேணுமானாலும் போகலாம் வரலாம் நடமாடலாம். புது சுதந்திரம் புதுவிதமான மனோதைரியத்தைத் தருகிறது. இங்கிருந்து ஓடத் தொடங்குகிறான். மனதில் தன் பழைய அடையாளத்தை சுமந்து கொண்டு.

3 . ஆலமரத்தடி studio 

அவனது ஓட்டம் நிற்கும் இடம் இந்த ஸ்டுடியோவில்தான். தன்னை கடைசியாக ஒரு புகைப்படம் எடுத்து தனது அம்மாவிற்கு அனுப்ப தயாராகும் கதாநாயகன், studio owner குழந்தையிடம் மனம்விட்டு அழுது புலம்பி கடைசியாக அங்கேயே தங்கிவிடுவான். புது அடையாளம் புது வேலை புது அனுபவம்…. இப்படி முடிவில்லாமல் அவனது வாழ்க்கை ஒரு சுழற்சியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. 

சமுதாயச் சூழல் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் தள்ளப்பட்ட இந்த கதாபாத்திரம் பராசக்தியில் வரும் குணசேகரனாகவும் இருக்கலாம். என்னால் மூச்சு விடமுடியவில்லை என்று கதறிய ஜோர்ஜ் பிளாய்டு ஆகவும் இருக்கலாம், இல்லையெனில் பாதாள சாக்கடைக்குள்ளே மூச்சை விடும் சக தோழராகவும் இருக்கலாம், நடந்தே ஊருக்கு போய்விடலாம் என்று  எண்ணி நடந்த புலம்பெயர்ந்த் தொழிலாளியாகவும் இருக்கலாம். இப்படி யாராகவேண்டுமானாலும்  இருக்கலாம் ஏன் நாளைக்கு நீங்களாகவும் நானாகவும்கூட  இருக்கலாம். 

அடையாளம் என்பது  நாளுக்கு நாள் மாறும் ஒரு விஷயமாகும், இதில் வர்க்கம், இனம், பாலினம், மற்றும் சாதி என்னும் பல்வேறு கோணத்தில் வழியில் அணுகவேண்டிய கட்டாயம் இன்று நமக்கெல்லாம் இருக்கிறது. என்னதான் ஒரு அடையாளத்தை இந்த கதாபாத்திரம் தேடி அலைந்தாலும் அதற்கு நிரந்தரமான ஒரே அடையாளமானது உழைப்பு மட்டும்தான். மற்ற அடையாளங்கள்  எல்லாம் அதனைச் சார்ந்தே அமைகிறது. ‘எங்களைப் போல இருக்குறவங்களுக்கு எல்லாம் கனவே இருக்கக்கூடாதா ?’ என கேட்கிறான் கதாநாயகன். முதலாளித்துவம் செய்யக்கூடிய ஒரே செயல் மனிதர்களின் கனவுகளை உடைப்பதுதானே. அதை உடைத்துவிட்டு முதலாளித்துவ கோட்பாட்டிற்கு எது சரியாக இருக்கிறதோ அதைத்தானே  நம் மேல், நம் கனவாக திணிக்கிறது, அதையே தேடி அலையவைக்கிறது. 

தனி மனித நாடகமாக இருந்தாலும், தொழிலாளர் ஒற்றுமையின் அவசியத்தை இந்த நாடகம் முன்வைக்க மறந்து விட்டதாகவே நான் பார்க்கிறேன். ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடங்களிலும் மனிதன் தனியாகத்தான் இருக்கிறான்  என்று பார்க்கும் போது மிகுந்த கவலை அளிக்கிறது. தொழிற்சாலையிலும்  சரி  கட்டிடம் கட்டும் இடத்திலும் சரி, இந்தக் கதாபாத்திரம் தனியாகவே அலைகிறது. தனது வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் நிலையில், சக தொழிலாளியின் உதவி ஏதும் இல்லை என்பது இன்றைய சூழலில் நடந்து  வரும் உண்மைதான். ஆனால் இன்னும் இந்த நாட்டில் போராட்டங்கள் ஓயவில்லை. மக்கள் ஆங்காங்கே போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள், மற்றவர்களுக்காக குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படி தனித் தனியாக கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் குரல்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டிய அவசியம் இன்றைக்கு நாடகத்திற்கு உள்ளது. அதைத்தான் சாமியின் நாடகம் முன்வைக்கிறது. அடையாளம் என்பது, நம் கையில் கொடுக்கப்படும் அட்டையில் அச்சிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் மட்டுமே என நம்பும் நம் நம்பிக்கையை உடைக்க முயல்கிறது. studio -வில் புகைப்படம் எடுக்க வரும்  அனைவரிடமும் குழந்தை கேட்கும் கேள்வி : இந்த போட்டோல உங்கள நீங்க எப்படி பார்க்க விரும்புறீங்க? இது அடையாளம் என்னும் அரசியலை உடைக்க முயல்கிறது. அடையாளம் என்பது ஒரு மாயை, அது நாளுக்கு நாள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது ஆனால், இதில் எப்போதுமே நிலையாக இருக்கும் அடையாளம் உழைப்பு மட்டும்தான், ஏனென்றால் மனிதர்கள் ஆகிய நாம் தொடர்ச்சியாக ஈடு பட்டுக்கொண்டிருக்கும்  செயல்  உழைப்பே. 

இந்த நாடகம் இன்னும் மெருகேற்றப்பட உதவியாக இருக்க கூடிய ஒரே பார்வையாளர்கள் உழைக்கும் மக்களே. இது நாடக மேடையை உடைத்து அட்டை இல்லா மனிதர்களின் நடமாடும் தெருவில், வேலை பார்க்கும் இடங்களில் நடத்தினால் மட்டுமே இது முழுமை பெரும், இதை இன்னமும் மெருகேற்ற முடியும் என நான் நம்புகிறேன்.

– ஜென்னி பாலசுப்பரமணியம்

இரண்டாம் அலை

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகப்போகிறது பெருந்தொற்றின் கொடிய காலம் தொடங்கி. மக்கள் கூட்டமே கொரொனாவிற்கு வாழ்வு என்ற நிலையில் கூட்டங்களைத்  தவிர்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் கூட்டம் இல்லாமல் விழாக்களா? விழாக்கள் இல்லாமல் கூத்துகளா? இத்தனை நாட்களாக கோயில் திருவிழாக்களோ அரசு விழாக்களோ, கலைவிழாக்களோ எதுவுமில்லை. இவைதான் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரமே. இன்று அவர்கள் முழுப் பட்டினி. கொரொனாவின் தொடக்க காலத்தை அல்லது முதல்அலையை யாராலும் யூகிக்க முடியவில்லை அல்லது முன் அனுபவம் இல்லை. எனவே அதை எதிர்கொள்ள எவருக்கும் வழி தெரியவில்லை. முட்டிமோதி ஒருவழியாக சமாளித்தாலும். ஒவ்வொரு தரப்பினருக்கும் நோயை எதிர்கொள்வதை விடவும் பெரிய சவாலாக இருந்தது பொருளாதார தேவையை சமாளிப்பது. அப்போது கொஞ்சம் கொஞ்சம் பணம் கையிருப்பு இருந்தது. சமாளித்தோம். கொடுமை அதோடு முடிந்துவிடும் என்று எண்ணினால் அலை தொடர்கிறது. இரண்டாம் அலை முன்பை விடவும் பெரும் வலி நிறைந்ததாக மாறியது. இந்த முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடைப்பட்ட நடுப்பகுதியில் அனைத்துத் துறைகளும் கொஞ்சம் இயங்க ஆரம்பித்தன. மெல்ல மெல்ல பணம் கைக்கு எட்டியது. மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி மூச்சு விட்டனர். அடுத்த அலைக்கு மனதளவில் தயாராகினர். ஆனால் இது எதுவும் நடக்க இயலாத ஒரு பகுதியினரும் இருந்தனர். அவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள்.

முதல் அலையில் தடைவிதிக்கப்பட்ட விழாக்கள் எதற்கும் இரண்டாம் அலை தாண்டி மூன்றாம் அலை தொடங்க உள்ள இந்த நேரம் வரை தளர்வளிக்கப்படவில்லை. இச்சூழலில் கலைஞர்கள் இரண்டாம் அலையை எதிர் கொண்டது சொல்லொண்ணாத் துயரம் மிகுந்தது. அந்தத் துன்பச் சமுத்திரத்தில் பற்றின்றித் தத்தளிக்கும் கலைஞர்களுக்கு ஒரு மரக்கட்டை மிதக்க போதுமானதாகப்பட்டது. ஆனால் அதுவே நிரந்தரத் தீர்வல்ல. முற்றான உதவியும் அல்ல. இச்சூழலில் அவர்களுக்கு உதவி செய்ய சிலர் முன்வந்தனர். அவர்கள் அளித்தத் தொகையைத் திரட்டி ஒப்படைப்பதற்காக கலைஞர்களிடம் அப்போது உரையாற்றினேன். அவற்றை அப்படியே அளிக்கிறேன்.

 ‘ஹலோ…’

 என்ற என் குரலுக்கு எதிர்முனையிலிருந்து ஒரு பெண் குரல்,

 ‘ஹலோ…’ என்றது.

 ‘வணக்கங்க வசந்தகுமாரி இருக்காங்களா?’ என்று உடனேயே,

 ‘சொல்லுங்க நான் வசந்தகுமாரிதான் பேசுறேன்.’

 என்ற அந்தக்குரலில் உச்சஸ்தாதி தெரிந்தது.

 ‘நீங்க நாடக கலைஞரா?’

 ‘ஆமாங்க.’

 இப்போது அந்தக் குரலில் ஒருவித தயக்கம் தெரிந்தது. தொடர்ந்து பேசத்தொடங்கினேன்,

‘நான் ஈரோட்டில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எங்க மாவட்ட தமிழ் ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து வறுமை நிலையில் இருக்கிற கலைஞர்களுக்காக நிதி உதவி அளிக்கலாம்ன்னு முடிவெடுத்திருக்கிறோம். அதான் அ.கா.பெருமாள் ஐயா கிட்ட அது தொடர்பா கேட்டிருந்தோம். ஐயாதான் உங்க எண்ணை கொடுத்தாங்க.’

 என்று முடித்ததுதான் தாமதம் நாLக்கலைஞர் வசந்தகுமாரியின் குரல் வேகமெடுக்கத் தொடங்கியது.

 ‘அய்யா புண்ணியமா போகும்யா ரெண்டு வருஷமா ரொம்ப கஷ்டம். எந்த ஒரு நாடக நிகழ்ச்சியும் இல்லைங்க. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நான் பெரும்பாலும் ராத்திரி நாடகத்துக்கு போயிடறதால பொண்ணுங்கள வீட்ல வச்சி பாதுகாக்க முடியல. மூத்தவளை அவ சின்ன வயசிலேயே கட்டி கொடுத்துட்டேன். அவளும் நாலு வருஷம் குடும்பம் நடத்திட்டு இரண்டு குழந்தையோட புருஷனை பறி கொடுத்து இப்ப எங் கூடவே வந்துட்டா. வீட்ல இப்போ நாலு பேரு. சின்னவளுக்கு இப்போ கல்யாணம் பண்ற வயசு. இப்போ சாப்பாட்டுக்கே வழியில்லை. இவ கலியாணத்தப் பத்தி எங்கய்யா நினைக்கிறது. ரேஷனில் அரிசி கொடுத்தாங்கையா. ஆனா வெறும் அரிசியை மட்டும் பொங்கி பொங்கி சாப்பிட முடியுங்களா? வாழ்வத்துப்போயி கிடக்கோம்முங்க. இப்ப திடீர்னு போன் பண்ணி உதவித்தொகை தர்றோம்ன்னு சொல்றீங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.’ எவ்வளவு வேகமாகத் தொடங்கியதோ அந்தக் குரல் இப்போது குழைந்து பணிந்து இறைஞ்சி நின்றது.

இது கலைக்கும் கலைஞனுக்கும் ஒரு சேரவந்த வேதனை. ஒருவாறு சுதாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினேன்.

 ‘இல்லம்மா நான் மட்டும் செய்யல. ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த உதவி செய்யறாங்க.’

இதற்கு மேல் அவரிடம் விளக்கிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. பசியில் இருப்பவனிடம் கதாகாலச் சேபம் நடத்திக் கொண்டிருப்பதுபோல் முட்டாள்தனம் இல்லை.

 ‘உதவி செய்றேன்னு சொன்ன உங்க எல்லாத்துக்கும் நன்றி சொல்லிக்கிறேங்க.’

 என்று சொல்லச்சொல்ல வசந்தகுமாரியின் குரல் இப்போது உடைந்திருந்தது. அவர்

அலைபேசியை துண்டித்தபோது என் காதோரம் அவர் கண்ணீரின் ஈரம் பிசுபிசுத்திருந்தது.

 இது கலைஞனின் கையறுநிலை. அவனைப் பாராட்டும் போது மட்டுமே நன்றி சொல்லிப்பழக்கப்பட்டவன் கலைஞன். வசந்தகுமாரி என்ற ஒற்றைக் கலைஞரிடம் நான் உரையாடிய நிகழ்வு இது. இதேபோல் கிட்டத்தட்ட இருபது கலைஞர்களிடம் உதவித்தொகை வழங்க பேசி இருப்பேன். அவர்களின் குரல்களும் குடும்பங்களும் மட்டும் வேறு வேறே ஒழிய, அனைவரின் கண்ணீரும் பசியும் ஒன்றாகவே இருந்தது.

“எங்க ஊர சுத்தி வயக்காடுங்க. இங்க இருக்கிற கிராமங்கள்ல ரெண்டு வருசமா அந்த விஷேசமும் இல்ல. எங்களுக்கும் கூத்து நிகழ்ச்சி இல்ல. சாமிக்கு படையல் இல்லங்கிறதால எங்களுக்குப் பசி இல்லாம போயுறுங்களா? பசி பொறுக்காம வயக்காட்டு வேலைக்காவது போயிறலாம்ன்னு நினைச்சா, ‘கூத்தாடுற நீ எப்படி வயக்காட்டு வேலை பாப்பன்னு’ சொல்லி கூலி வேலைக்கு கூட கூப்பிட மாட்டேங்குறாங்க. எல்லாரும் வீட்டுக்குள்ளயே கிடக்க யார்கிட்ட போய் கேட்கிறதுன்னு கூட தெரியலைங்க.” என்று கலங்கி நிற்கும் கூத்துக் கலைஞனின் குரலைக் கேட்கும் போது வாய்க்குள் செல்லும் ஒவ்வொரு கவளச் சோறும் நம் தொண்டைக்குழியை நெறிக்கிறது..

‘அவரு கூத்தாடுறவருங்க. போன வருஷம் ஒரு ஆக்சிடென்ட்ல செத்து போயிட்டாரு. எனக்கு நாலு பசங்க. இவங்கள எப்படி காப்பாத்தப்போறேன்னே தெரியல. ரேஷன் கடையில் கொடுத்த அரிசிய வச்சு கஞ்சி குடிச்சுட்டு உசுர புடிச்சு கிட்டு இருக்கேன்.’ கலைஞனை இழந்த ஒரு மனைவியின் கண்ணீர் இது.

 ‘கலியாணத்தை தள்ளிப் போட்டோம். ஆபரேஷனை கூட தள்ளிப் போட்டுட்டோம். பசியை எப்படி தள்ளிப்போடுறதுன்னு தெரியலங்க.’ என்றார் உதவி தொகையைப் பகிர்ந்து கொடுக்கும் அந்த ஊர்த் தலைவர்.

 இப்படி ஒவ்வொரு கலைஞனுக்குப் பின்னாலும் இருளடைந்த பக்கங்கள். இப்போது சின்ன வெளிச்சம் போதுமானதாக இருந்தது அவர்களுக்கு. ஒரு கலைஞருக்கு அரசு வழங்கும் உதவித்தொகை இரண்டாயிரம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பதினைந்து கலைஞர்களுக்கு முப்பதாயிரம் வழங்கலாம் என்று திட்டமிட்டோம். இதைச் செயல்படுத்த நினைக்கும் போது எனக்குள் ஒரு சின்ன நெருடல் கூட இருந்தது. இரண்டாயிரம் ரூபாய் அவர்களுக்கு போதுமானதாக இருக்குமா? என்று. ஆனால் இருப்பதில் இதுதான் சாத்தியமும் கூட. மெதுவாக வில்லிசைக் கலைஞர் தங்கமணியிடம் கேட்டும் விட்டேன். ‘இரண்டாயிரம் தான் எங்களால் இப்போதைக்கு முடியும். அது போதுமா’ என்று.

 ‘சார் இதுவரை உதவி செய்வதிலேயே அதிகபட்சமே இரண்டாயிரம் தான். கவர்மெண்ட் இரண்டாயிரம் கொடுத்துச்சு. அப்புறம் நீங்க கொடுக்குறீங்க. மத்தபடி ஆயிரம் ரூபாய்க்கு மேல யாரும் தந்ததில்லை சார்.’ என்றார். பணத்தின் மதிப்பு என்பது அது இருக்கும் இடத்தை பொறுத்து மாறுகிறது. இந்த சிறு வெளிச்சம் தான் அவர்களின் இருளை கிழிக்கிறது.

‘இன்றையச் சூழலில் உலகம் முழுவதும் கீழ்நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறக்கூடிய அபாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்’ என்கிறது ஐ.நா. இந்த கணக்கீடுகள் வெறும் பணத்தை மட்டும் அளவீடாக வைத்துதான் செய்யப்பட்டுள்ளது என்றால், அதை முறியடிக்க கொடுத்துதவிய அவர்கள் மனம் பெரியது. எதிர்பார்த்திருக்கவில்லை ஒரு வாரத்தில் ஆசிரியர்களிடமிருந்து இவ்வளவு பெரிய உதவித்தொகை வந்து சேரும் என்று. நாம் கேட்கும் முன்பே ஆசிரியர்கள் பலரும் பலருக்கும் கொடுத்து உதவி கொண்டிருக்கும்போது இன்னும் இன்னும் என்றால் எப்படி? என்ற ஐயம் எழுந்தது. ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் சக்தியையும் மீறி அளித்துதவினார்கள்.

 பாதாளம் வரை பாயும் பணம் ஒவ்வொரு கலைஞனின் வீட்டு பசியார பாய்ந்துள்ளது. மனிதச் சங்கிலியை உடைக்க வேண்டிய கட்டாயமும், அதே சங்கிலியை இணைக்க வேண்டிய தேவையும் ஒரே நேரத்தில் நடந்துள்ள முரணெதிர். இப்போது ஒரு பிடி கவளச் சோறு உறுத்தல் இல்லாமல் தொண்டைக்குள்ளே இறங்குகிறது.

 அரசு நாம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக செயல்படுகிறது. இதை எழுதிக் கொண்டிருக்கிற நாளில், மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் தமுஎகச ஏற்பாடு செய்திருந்த கலைஞர்களின் மாநாட்டில் நானும் கலந்து கொண்டிருந்தேன். கலைஞர்களின் கோரிக்கைகளை கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர். நிவாரணம் மிக விரைவாக கலைஞர்களைச் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. அதுவரைக்குமான சிறிய உதவியை நாம் செய்திருக்கிறோம். கலைஞர்கள் நன்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள். உதவி செய்வதற்காக இணைத்துப் பிடித்த கரங்களை இறுக்கிப் பிடித்து இந்தக் கொடிய காலத்தைக் கடப்போம்.

அற்றார் அழிபசி தீர்க்க திரண்டெழுந்த நல்லுள்ளங்கள் கலையைக் காக்க உதவியுள்ளது.

இச்சமயத்தில் உதவி செய்ய நம்மோடு இணைந்து நின்ற ஈரோடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்திற்கும், விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு, செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி ஈரோடு, மற்றும் திருமதி சிவானந்தி கணேசராயன், ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறை லண்டன், அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்.. நம் பணி இன்னும் நிறைவடையவில்லை.

 ‘மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ காத்திருப்போம் கொடுப்பதற்கு.

– செழியன் கோ