தான் யார் என்பது மனிதர்கள் காலம் காலமாக க் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விதான். இந்த கேள்வியானது நிரந்தரமாக நமக்குள் இருக்கக் கூடியதொன்றே. தனிமனித அடையாளம் என்பது சமீப காலமாக மிகவும் பரவலாகப் பேசப்படக் கூடிய ஒரு தலைப்பாகும். கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து, மேற்கத்திய சிந்தனையில் வந்த மாற்றம் தனிமனிதவாதம். இப்பொழுது அந்த சிந்தனை தனிமனித அடையாளத்துக்குள் அடி எடுத்து வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
மனிதனுக்கென்று தனி அடையாளம் இருக்கமுடியுமா ? தனக்கான அடையாளம் என்பது தன்னைச் சுற்றி இருக்கும் “material condition “மற்றும் சக மனிதர்களின் இடையே இருக்கும் உறவை பொறுத்துதான் அவனது அடையாளமானது அமைகிறது. சுயம்பாகவோ, தான்தோன்றியாகவோ மனிதன் இருக்கமுடியும் என்றால் அது வெறும் புராணக்கதையாக தான் இருக்கமுடியும். அடிப்படையில் மற்றவர்கள் இல்லாமல் நம்மால் வாழ இயலாது. ஜீன்- பால் சார்ட்ரே சும்மா சொல்லவில்லை “நரகம் என்பது மற்றவர்கள் தான் என்று”.
உங்களை நீங்கள் எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் ? என்ற ஒரு தனிமனித நாடகம் பார்க்க வாய்ப்பு அமைந்தது. ஆனந்த் சாமி மற்றும் ராஜீவ் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த நாடகம் ஒரு “work in progress ” ஆக இருக்கக்கூடிய ஒன்றாகும். நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கும் கதையாகும். “sizwe bansi is dead ” என்னும் ஒரு தென் ஆப்பிரிக்க நாடகத்தை தழுவி எழுதப்பட்டதொன்றாகும். தென் ஆப்பிரிக்காவில் இன ஒதுக்கல் (1948-1998) காலகட்டத்தில், வேலை தேடிச் செல்லும் அனைத்து கறுப்பின மக்களும் தன் கையில் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் இருந்தது. அட்டையில்லாதோர் கேம்ப்களில் அடைக்கப்பட்டனர். இதே போல், இரண்டாம் உலகப்போரின் போது, யூதர்களின் மேல் ஒரு நட்சத்திரம் அடையாளமாகக் குத்தப்பட்டது. அடிமைகளாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட கறுப்பின மக்களின் மேல், அடிமை என முத்திரை குத்தப்பட்டது… இப்படி ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அவ்வளவு தூரம் போகாமல், நம் தமிழ்நாட்டிலேயே பார்க்கலாம். பள்ளிக்கூடம் போகும் குழந்தையின் கையில் சாதியை வெளிப்படுத்தும் நிறங்களில் கயிறுகளை கட்டிவிட்ட சம்பவம் நியாபகம் இருக்கும்.

இப்படி அடையாள அட்டையின் அரசியல் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் துரத்தி வருகிறது. இருபத்தோராம் நூற்றாண்டு இதற்கு விதி விலக்கல்ல, இன்னும் தீவிரமாக அதை முன்னெடுத்துச் செல்கிறதே தவிர அதை இன்னும் தாண்டி செல்ல முடியவில்லை.
இன்றைய அரசியல், பொருளாதார மற்றும் சுகாதார சூழ்நிலையில் இருந்து பார்க்கும்போது இந்த நாடகமானது மிகவும் முக்கியமான கேள்விகளை நம் முன்னால் வைக்கிறது. உலகமே பெருந்தொற்றின் கைப்பிடியில் மாட்டிக்கொண்டு அலைகிற நேரத்தில், ஆத்மநிர்பர் எனும் தத்துவத்தில் வாழப் பழகிக்கொள்ளச் சொல்லும் நேரத்தில், உலகில், நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் அத்துமீறல், தொழிலாளர்கள் உரிமை அத்துமீறல் என ஏகப்பட்ட அத்துமீறல்கள் தினமும் நடந்து வருகின்றன. இவைகள் அனைத்தும் நாம் கண் சிமிட்டும் நேரத்தில் இந்த நாட்டில் நடந்துவருகிறது என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும் பெரிதாக என்ன நடந்து விடப் போகிறது என்னும் ஒரு அசட்டு தைரியம் நமக்குண்டு.
இப்படி அசட்டு தைரியத்தில் தூங்குவோரைத் தட்டி எழுப்புகிறது இந்த நாடகம். இந்த நாடகம் மொத்தமாக 3 பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். ஒரு மனிதனின் வாழ்க்கை வட்டமாக, முடிவு ஆரம்பமாக, ஆரம்பம் முடிவாக தொடங்குகிறது. பல கனவுகளோடு ஊரை விட்டுச் செல்லும் ஒரு இளைஞனின் கதை தான் இது. சாமி, சொல்வது போல ஆவிகளாய் இந்த நாட்டில் திரிந்து கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கதை. அம்மா, பெயர் இல்லா இளைஞன், அவனது நண்பன், அவனுக்கு வேலைகொடுக்கும் ஸ்டுடியோ ஓனர் குழந்தை , இப்படியாக நிறைய கதாபாத்திரங்கள் நிறைந்து இருக்கும் இந்த நாடகம், பெயரில்லா கதாநாயகனைச் சுற்றி வருகிறது. சாமியின் கதை கூறும் திறன் இந்த மனிதனை ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைக்கிறது. அதைப் பார்க்கும் நமக்குள்ளும் ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. அவரது நடிப்பு, நம்மை அந்த பெயரில்லா நாயகனோடு நெருக்கமாக பயணிக்கச் செய்கிறது.

அவனது வாழ்க்கை எங்கே தொடங்குகிறது எங்கே முடிகிறது என்பது பார்ப்பவர்களுக்குக் கேள்வியை எழுப்புகிறது. சுழற்சியாக அவனது வாழ்க்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவதை சாமி மிகவும் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். அதுவும் ஒரு தனி மனிதனாக இருந்து அனைத்து கதாபாத்திரங்களையும் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார்.
அதே போல் இன்றைய இந்தியச் சூழலில் ஒரு மனிதன் தன் அடையாளத்தைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆதார் அட்டை இல்லை என்றால் பள்ளிக்கூடத்தில் இன்று மதிய உணவு இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒரு அட்டை மக்களின் வாழ்வை ஆட்டிப் படைக்கிறது. அப்படி அட்டை இல்லாத ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என அட்டை வைத்திருக்கும் நமக்குத் தெரியுமா ? அவனுக்குள் ஊடுருவும் பயம் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? மூட்டை பூச்சிகளை நசுக்குவது போல் முதலாளித்துவமும் ஆளும் அரசாங்கங்களும் உழைக்கும் மக்களை நசுக்கி சுரண்டிப் பெருத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தப் பெயர் தெரியாத இளைஞனின் குரல் நம்மைத் தட்டி எழுப்புகிறது. இந்த நாடகத்தின் வெற்றி பார்வையாளர்களாகிய நம்மை உணரவைப்பதில் இருக்கிறது.
1 . பிங்கோ கார் கம்பெனி
ஒரு கார் தயாரிக்கும் சீன தொழிற்சாலையில் உற்சாகமாக வேலைக்குச் சேரும் நம் கதாநாயகன் சில நாட்களில் தோய்வுறுகிறான். ஒண்ணுக்குப் போகக்கூட நேரம் இல்லாமல் வேலை பார்க்கும் அவன் ஒரு நாள் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து பயந்து போகிறான். ‘இந்த கண்ணாடியில் தெரியும் இந்த உருவம் தன்னுடயது தானா?’ என கேள்வி எழுப்புகிறான். இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் முன்னதாகவே அந்த வேலையில் இருந்து தப்பி ஓடுகிறான்.

2 . கண்காணாத ஊரில் கூலித்தொழில்
ஆடுகளை ஏற்றிச் செல்லும் வண்டியைப் பார்த்திருப்போம். அப்படி கூட்டம் கூட்டமாக வேலைக்கு ஆட்களை ஏற்றி ஒரு வண்டி தமிழ்நாட்டில் இருந்து எங்கோ கிளம்புகிறது. மூச்சுவிடக் கூட இடம் இல்லாத அளவுக்கு நெரிசல், வியர்வை, பயம் எல்லாம் கலந்த காட்சி அது. சாமியுடன் நாமும் அந்த வண்டியில் சிக்கி கொண்ட ஆட்டை போல உணரமுடிந்தது.
மொழி, ஊர்ப்பெயர் தெரியாத ஒரு இடத்தில் பல அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் இடத்தில் இவனுக்கு வேலை. எறும்பு புத்து கட்டுவது போல் ஊரெங்கும் அடுக்குமாடிக் கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் வேலைபார்க்கும் இடமானது நம் கண் முன்னே கொண்டுவருகிறார் சாமி. யார் இவர்கள் ? நாம் தினம் தெருவில் போகும்போதும் வரும்போதும் வேலைபார்க்கும் தொழிலாளிதான். நம் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலே இருக்கும் இவர்களை அச்சுறுத்துவது அடையாள அட்டை.
‘அட்டை இல்லையா? அப்போ உங்களின் கதி கேம்ப் தான். நீங்கள் யாரென்று நிரூபிக்க முடியவில்லையா அப்பொழுது நீங்கள் போகவிருக்கும் இடம் கேம்ப் தான்.’ ரொம்ப வேகமாக ஒரு நகரத்தின் அடையாளத்தைத் தனது உழைப்பினால் மாற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இல்லையெனில் கேம்ப் தான் ஒரே இடம்…. இப்படியாக ஒரு சுழற்சிக்குள்ளே இருந்து இன்னொரு சுழற்சிக்குள்ளே தள்ளப்படும் நமது கதாநாயகனுக்கு ஒரு நாள் ஒரு அட்டை கிடைக்கிறது, தெருவில் கிடக்கும் ஒரு பிணத்தின் பையில் இருந்து. புது அடையாளம், இனி பயம் இல்லை. எங்கு வேணுமானாலும் போகலாம் வரலாம் நடமாடலாம். புது சுதந்திரம் புதுவிதமான மனோதைரியத்தைத் தருகிறது. இங்கிருந்து ஓடத் தொடங்குகிறான். மனதில் தன் பழைய அடையாளத்தை சுமந்து கொண்டு.

3 . ஆலமரத்தடி studio
அவனது ஓட்டம் நிற்கும் இடம் இந்த ஸ்டுடியோவில்தான். தன்னை கடைசியாக ஒரு புகைப்படம் எடுத்து தனது அம்மாவிற்கு அனுப்ப தயாராகும் கதாநாயகன், studio owner குழந்தையிடம் மனம்விட்டு அழுது புலம்பி கடைசியாக அங்கேயே தங்கிவிடுவான். புது அடையாளம் புது வேலை புது அனுபவம்…. இப்படி முடிவில்லாமல் அவனது வாழ்க்கை ஒரு சுழற்சியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
சமுதாயச் சூழல் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் தள்ளப்பட்ட இந்த கதாபாத்திரம் பராசக்தியில் வரும் குணசேகரனாகவும் இருக்கலாம். என்னால் மூச்சு விடமுடியவில்லை என்று கதறிய ஜோர்ஜ் பிளாய்டு ஆகவும் இருக்கலாம், இல்லையெனில் பாதாள சாக்கடைக்குள்ளே மூச்சை விடும் சக தோழராகவும் இருக்கலாம், நடந்தே ஊருக்கு போய்விடலாம் என்று எண்ணி நடந்த புலம்பெயர்ந்த் தொழிலாளியாகவும் இருக்கலாம். இப்படி யாராகவேண்டுமானாலும் இருக்கலாம் ஏன் நாளைக்கு நீங்களாகவும் நானாகவும்கூட இருக்கலாம்.
அடையாளம் என்பது நாளுக்கு நாள் மாறும் ஒரு விஷயமாகும், இதில் வர்க்கம், இனம், பாலினம், மற்றும் சாதி என்னும் பல்வேறு கோணத்தில் வழியில் அணுகவேண்டிய கட்டாயம் இன்று நமக்கெல்லாம் இருக்கிறது. என்னதான் ஒரு அடையாளத்தை இந்த கதாபாத்திரம் தேடி அலைந்தாலும் அதற்கு நிரந்தரமான ஒரே அடையாளமானது உழைப்பு மட்டும்தான். மற்ற அடையாளங்கள் எல்லாம் அதனைச் சார்ந்தே அமைகிறது. ‘எங்களைப் போல இருக்குறவங்களுக்கு எல்லாம் கனவே இருக்கக்கூடாதா ?’ என கேட்கிறான் கதாநாயகன். முதலாளித்துவம் செய்யக்கூடிய ஒரே செயல் மனிதர்களின் கனவுகளை உடைப்பதுதானே. அதை உடைத்துவிட்டு முதலாளித்துவ கோட்பாட்டிற்கு எது சரியாக இருக்கிறதோ அதைத்தானே நம் மேல், நம் கனவாக திணிக்கிறது, அதையே தேடி அலையவைக்கிறது.

தனி மனித நாடகமாக இருந்தாலும், தொழிலாளர் ஒற்றுமையின் அவசியத்தை இந்த நாடகம் முன்வைக்க மறந்து விட்டதாகவே நான் பார்க்கிறேன். ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடங்களிலும் மனிதன் தனியாகத்தான் இருக்கிறான் என்று பார்க்கும் போது மிகுந்த கவலை அளிக்கிறது. தொழிற்சாலையிலும் சரி கட்டிடம் கட்டும் இடத்திலும் சரி, இந்தக் கதாபாத்திரம் தனியாகவே அலைகிறது. தனது வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் நிலையில், சக தொழிலாளியின் உதவி ஏதும் இல்லை என்பது இன்றைய சூழலில் நடந்து வரும் உண்மைதான். ஆனால் இன்னும் இந்த நாட்டில் போராட்டங்கள் ஓயவில்லை. மக்கள் ஆங்காங்கே போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள், மற்றவர்களுக்காக குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி தனித் தனியாக கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் குரல்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டிய அவசியம் இன்றைக்கு நாடகத்திற்கு உள்ளது. அதைத்தான் சாமியின் நாடகம் முன்வைக்கிறது. அடையாளம் என்பது, நம் கையில் கொடுக்கப்படும் அட்டையில் அச்சிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் மட்டுமே என நம்பும் நம் நம்பிக்கையை உடைக்க முயல்கிறது. studio -வில் புகைப்படம் எடுக்க வரும் அனைவரிடமும் குழந்தை கேட்கும் கேள்வி : இந்த போட்டோல உங்கள நீங்க எப்படி பார்க்க விரும்புறீங்க? இது அடையாளம் என்னும் அரசியலை உடைக்க முயல்கிறது. அடையாளம் என்பது ஒரு மாயை, அது நாளுக்கு நாள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது ஆனால், இதில் எப்போதுமே நிலையாக இருக்கும் அடையாளம் உழைப்பு மட்டும்தான், ஏனென்றால் மனிதர்கள் ஆகிய நாம் தொடர்ச்சியாக ஈடு பட்டுக்கொண்டிருக்கும் செயல் உழைப்பே.
இந்த நாடகம் இன்னும் மெருகேற்றப்பட உதவியாக இருக்க கூடிய ஒரே பார்வையாளர்கள் உழைக்கும் மக்களே. இது நாடக மேடையை உடைத்து அட்டை இல்லா மனிதர்களின் நடமாடும் தெருவில், வேலை பார்க்கும் இடங்களில் நடத்தினால் மட்டுமே இது முழுமை பெரும், இதை இன்னமும் மெருகேற்ற முடியும் என நான் நம்புகிறேன்.
– ஜென்னி பாலசுப்பரமணியம்