காலம் :
அம்மைத்தொற்று இருந்த நாட்கள்.
இடம்
ச.முருகபூபதி அவர்களின் மணல்மகுடி நாடக நிலம் , கோவில்பட்டி.
மணல்மகுடி நாடக நிலம் கோவில்பட்டியில் முருகபூபதியின் வீட்டின் முற்றத்தில் இயங்குகிறது. நடிப்பிடத்தின் நடுவில் ஒரு வேப்ப மரம் , நிழல் இறக்கி அசைந்துகொண்டிருக்கும். அதனைச் சுற்றிலும் நாடக ஒத்திகை, நாடகப் பேச்சு , கலை சார்ந்த பகிர்தல் என கலை இயங்கியல் கொள்ளும்.
ஒத்திகை நாட்களின் கதை – 1.
அவர்கள் “ மிருக விதூஷகம் ” நாடக ஒத்திகையில் இருந்தார்கள். குழுவில் ஒரு கலைஞருக்கு அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுப் போனது. அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்த்தொற்றுப் பிற கலைஞர்களுக்கும் பரவிவிடக்கூடாது. என்ன செய்யலாம் -பேசிக்கொண்டிருக்கும்பொழுது நோய்த்தொற்று பாதித்த கலைஞர் சிகிச்சைக்குச் செல்ல மறுக்கிறார். வெக்கை ஊர்க்காரக் கலைஞருக்கு அதை பெரும் நோயாக பாவித்துத் தன்னை நாடகத்திலிருந்து விலக்கிக்கொள்ள மனம் ஒப்பவில்லை. மூன்று நாளில் உடல் குளிர்ந்து போகும். நீங்கள் யாரும் அஞ்ச வேண்டாம் நான் என்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.
கோணங்கி கதவு நிலைப்படியில் அமர்ந்துகொண்டு இவர்களைப் பார்த்தபடியிருக்கிறார்.
நாடக நிலம் குழப்பத்தில் இருந்தது.
வேப்ப மரத்தைப் பார்த்தபடி அந்தக் கலைஞர் உறுதியாகச் சொல்கிறார்.
“ யண்ணே நாடகம் முடிஞ்சிரிச்சி. ரிகர்சல் டைட்டாப் பேய்ட்டிருக்கும்போது என்னிய போவச்சொன்னா எப்பிடி. நா ஒட்டாம இருந்துக்கிடுதேன். யாரும் பயப்பட வேணாம்ணே. ”
“ டேய் இவன் ஒருத்தண்டா. என்னத்தையாவது யோசிச்சுக்கிட்டு. நாங்க பயப்படல. ஒனக்கு சொகமாகணும்.” – முருகபூபதி.
“ என்னெய பத்தி கவலபடாதிய. அம்மெ இன்னிக்கா இருக்கு. யேண்ணே நீ வேற சலம்பிக்கிட்டு. மாரியாத்தாள நெனச்சி வேப்பங்கொழுந்த பறிச்சு போட்டுப் படுத்துக்கிடுதேன். காலையில் பச்சத்தண்ணிய ஊத்துனா சரியா போவும்”
கோமாளி முருகேசன் குறுக்கிட்டார்.
“ தாயளிக்கு ஒண்ணு ஆகாதுண்ணே. நைட்டு விபூதி பூசி விடுறேன். சரியா போவும். தாயளிக்கி இப்ப பாத்து நோவு கண்டுருச்சி. என்ன செய்ய. மாரியாத்தாதாண்ணே. ரிகர்சல பாருங்க. எலேய் நீ இன்னிக்கு அங்கிட்டு கெட. சரியா போவும். எலேய் ரிகர்சல் மூடுக்கு வாங்கலே.என்ன சொல்றியெ..
“ நீயும் நானும் ஒண்ணு
ஒம்புருசம் வாயில மண்ணு…”
என்று சுதி ஏத்திப் பாட,
கலைஞர்கள் மெல்லச் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பில் ரிகர்சல் மூட் பிறந்திருந்தது. ஆமண்ணே…ஒருத்தர் இல்லனா ஒடஞ்சி பேயிரும் . பாத்துக்கிருவம்ணே…….எல்லோரும் ஆமோதித்தார்கள்.
நாடகமும் நாடக ஒத்திகைகளும் பித்துப் பிடித்த மன நிலையை உருவாக்கக் கூடியன. ஒத்திகை நாட்களில் படைப்பாக்க மன நிலை உணர்வெழுச்சியுடன் இருக்கும். அந்த உணர்வெழுச்சியில் கலைஞர்கள் எல்லோரும் நோய்மையை மறந்திருந்தார்கள்.
சிரிப்பலையில் கலைஞர்கள் அசைந்து இடம் மாறி அமர்ந்தார்கள்.
“ சரியா இருக்குடா முருகேசா. பூபதி அவஞ் சரியாச் சொல்லிட்டான் . ஒண்ணும்பண்ணாது . அம்மெக்கி நாடகம் பிடிச்சு போச்சுடா முருகேசா..எப்பிடி …எப்பிடி ..ஏது..அம்மெக்கி , நாடகம் பிடிச்சி போச்சி…ஏது ”
என்ற கோணங்கிக்குக் ஆமண்ணே …ஆமண்ணே என்று கலைஞர்கள் உற்சாகமானார்கள் . ஒத்திகை தொடர்ந்தது. ஒத்திகையின் பெருவேகத்தில் நோய்மையை மறந்து தொற்று ஏற்பட்ட கலைஞரும் நடித்தார். மூன்று நாட்கள் ஒத்திகைக்குப் பின்னர்தான் அறிந்துகொண்டார்கள்.
’ எல்லா கலைஞர்களுக்கும் அம்மைப் பிடித்திருந்தது’.
உடல்களில் கொப்புளங்கள் நீர்மை கொண்டிருந்தன. வெக்கை அவர்களைச் சூழ்ந்திருந்தது. களைப்பைச் சூடிய உடல்கள் ஓய்வை மறுத்தன. அவர்கள் நோய்மைக்கான மருந்தென ஒத்திகையை முன்மொழிந்தனர். வெக்கையிலும் பெருவலியிலும் உறக்கத்திலும் வந்த அனத்தல், நாடகவசனமாகவே இருந்ததை பெரியவயல் எழுதிய எம்.எஸ்.சண்முகம் கூறினார்.
அம்மைத் தொற்றால் கொப்புளங்களாகக் குமிழ் கொண்ட உடல்கள் நடித்தபொழுது வெடித்து நீர்ப் பீய்ச்சியது. கொப்புளங்கள் வெடிக்கும் சத்தம் மொட்டு விரிவதாய் நாடகப் பின்னணி இசையானது. வலியில் சுகம் கண்டார்கள். உடலெனும் பெருமந்திர ரகசியத்தை அதன் வெளிப்பாட்டை ஒத்திகை உணர்த்தியபடி இருந்தது. இறுதி ஒத்திகை முடிந்து நடிப்பிடத்தில் மவுனமாய் அமர்ந்திருந்தபோது அம்மை வெளியேறியிருந்தது.
இது ஒரு அனுபவம்.

கொரானா பெருந்தொற்றும் சங்கரதாஸ் சுவாமிகளும்.
கொரானா பெருந்தொற்று கலைஞர்களை , கலைச்செயல்பாடுகளை நிறுத்தியது. கலைஞர்கள் பலரும் தொற்றிற்கு பலியானார்கள். பலருக்கும் தெரிந்த எழுத்தாளார்கள் , கலைஞர்களுகுத் தொற்று ஏற்பட்டால் உடனே ஊடகம் இரக்கம் கொள்கிறது. ஆனால் எத்தனையோ நாட்டுப்புறக் கலைஞர்கள் நாடகக் கலைஞர்கள் நோய்த்தொற்றில் பலியாகியுள்ளனர். நிராதரவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் கொரானா நோய்த்தொற்றில் கொரானா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன். தனிமையில் நாடக நினைவுகளும் நாடகப்புகைப்படங்களுமே எனக்கு மருந்தாக இருந்தன. துயர நாட்களில் செப்டம்பர் 7 தமிழ் நாடக மூதாதை சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாள் வந்தது. அந்த நாளின் நினைவுகள் நோய்மையை சங்கரதாஸ் சுவாமிகளை மனதிற்குள் எழுதிப்பார்த்தது. முகாமில் படுத்திருந்த கொரானா நோயாளிகளின் இருமும் உடல்கள் காய்ச்சல் கண்டு வெளிறிய உடல்கள் அச்சம் பீடித்து சுருண்டு படுத்திருந்த உடல்கள் மெதுவாக இடுப்பைப் பிடித்தபடி நடக்கும் உடல்கள் , வீட்டை நினைத்து அழுதிருக்கும் உடல்கள், நீல வண்ணத்தில் முழுதும் மூடிய செவிலியர் உடல்கள் என நோய்மை உடல்கள் அசைந்தபடியிருந்தன. அந்த உடல்களின் இயக்கம் நாடக நிலத்தினை, மேடையை நினைவூட்டியது. உலகின் மொத்த மனிதர்களும்
தங்கள் துயரத்தை உடலுள் ஏற்று மிகப்பெரிய மைதானத்தில் உருண்டு மவுனமாய்க் வாயசைப்பது போன்றதொரு சித்திரம் எழுந்தது. எனது நாடகத்திற்கான பிரதியை மனம் வருவித்துக்கொண்டே இருந்தது.
நாடகத் தயாரிப்பிற்கும் நடிகர்களுக்குமான சூழல் சரியாக இல்லாத ஊரடங்கு காலத்தில் கொரானா முகாமிற்கு சங்கரதாஸ் சுவாமிகள் வந்திருப்பதாக மனம் நம்பியது. நோய்மையில் இருக்கும் உடல்களை அவர் என்ன செய்வார் என நினைத்துப்பார்ப்பது வலியை மறக்கச்செய்தது. மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாம்பல் அட்டையில் கவிதைபோல எழுதினேன். எனக்கான மருந்து, சாம்பல் அட்டைக்குள் இல்லை ,அட்டைக்குமேல் நான் எழுதுவதில் இருக்கிறது என்பதையறிந்தேன்.
சங்கரதாஸ் சுவாமிகள் நோயாளிகளுக்கிடையில் ஆடிப் பாடிக்கொண்டிருந்தார். கோமாளியாகி நாடக நிலத்திற்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார்.
கொரானா முகாமில் நான் சந்தித்தக் கூத்துக் கலைஞர் என் மருத்துவர் போல இருந்தார். அவரது உடல் அசைவுகளில் கூத்தின் நடையும் ஓட்டமும் குடி கொண்டிருந்தன. தங்கள் குழுவில் சிலருக்கு ஏற்பட்ட தொற்று குறித்து , முகத்தில் ஒரு கையை வைத்தவாறு இப்படிச் சொன்னார்.
“ எனக்கொண்ணுமில்லீங் கண்ணு… ஆனா என்னய புடிச்சுட்டு வந்துட்டாங்க. இந்தக் கொரானா நாளுல பட்னிகெடந்தோம். சாமி கண்ண தொறந்தாப்ல நாமக்கலுல கூத்துப் பேசினாங்க கண்ணு. அபிமன்னன் வேஷம் கட்டுவேன். வாத்தியாரு சொல்லி வுட்டுருந்தாருகண்ணு. நெம்ப சந்தோசமாகி துணிமணியெல்லாம் எடுத்து வச்சிருந்தேன். சலங்கைய தேடீட்டுருக்கப்போ போன் பண்ணீட்டாங் கண்ணு. உங்களுக்கு கொரானாவாமானு பக்கத்தூட்டுப் பையஞ்சொல்லிச்சு. அட என்னிது . டவுனுக்குப் போய்ட்டு.. பஸ்சுல வந்தப்போ டெஸ்ட் எடுத்தாங் கண்ணு. அது தப்பாப் போச்சு. இப்ப இங்க புடிச்சுட்டு வந்துட்டாங்க ..” என்று கூத்து வசன வேகத்தில் சொல்லி முடித்தார்.
முகாமிற்கு நான் எடுத்துச் சென்றிருந்த புல்லாங்குழலை அவரிடம் தந்தேன். வாசிக்க ஆரம்பித்தார். முகவீணையில் வரும் இசை புல்லாங்குழலில் முகாமை நிறைத்தது.
இந்நேரத்திக்கெல்லாம் வேசங்கட்டீட்டுத் தயாராய் இருந்திருப்போம். இப்பிடியாகிப்போச்சு கண்ணு ….என்று பெருமூச்செறிந்தார். எனக்கு எங்கோ கூத்துக் களத்தில் பாடும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

அவர்களது கதையையும் எழுதிப்பார்த்திருக்கிறேன்.
இவை எழுதப்பட்ட வடிவம் கவிதையாகியுள்ளனவா என்று தெரியாது.
நோய்மைகொண்ட உடல்கள் சொல்லும் நாடகக் கதை.
(1)
தொற்று
ஒவ்வொரு ஊர்க்காரனுக்கும்
அந்தந்த ஊரின்
மண்சிலைமுகத்தை
வழங்கியிருந்தது.
வெளியேறும் மூச்சும்
குளிர் நடுக்கமும்
இருமலும் கொண்ட
ஒவ்வொரு உடலும்
பெருநாடகமொன்றை
நிகழ்த்திக் கொண்டிருந்த
மேடையைக் கண்டு நின்றவர்
நெளியும் உடல்களில் இருந்து
உதிரும் மண்ணைச்
சேகரித்தார்
உடல்களைப் பிடித்து
கோணல்களாக்கும்
சிற்பியாக வந்திருந்தார்
சங்கரதாஸ்
நடிப்புக் களத்தில்
நல்ல அறுவடை.
பெருந்தொற்று முகாமில்
ஒப்பனைப்பையுடன் நிற்கும்
அவரைக் கண்டு
வெளியேறுகின்றன
நோய்மைப் பூச்சிகள்.
………………………………………………………………………………………………………
(2)
அணைக்கட்டுக் கற்சுவரில்
நீரின்
தளும்புதல்களும் தண்மையும்
தெரிவதாக
முகக்கவசத்திற்குள்
துடிக்கும் உணர்வுகளைக் கண்டு
ஒவ்வொரு உடலையும்
தொட்டுத் தொட்டுப் போனார்
சங்கரதாஸ்.
தள்ளி நில், தொடாதே,தீட்டு
சத்தமிடும் சனாதனம்
பெருந்தொற்றில்
பிணக்குவியலானதை
இசைநாடகப் பாடலைப்
பாடி அறிவிக்கும்
அந்த நாடகக்காரின் கண்களில்
தெரிந்தது
கரங்கள் அகல விரித்து
அணைத்துக்கொள்ளும்
நாடக நிலம்.
……………………………………………………………………………………………………….
(3)
ஓஓஓஓ……….பெருஞ்சத்தமெழுப்பி
நோயுடல்களின் வட்டத்திற்குள்
நின்றவர்
மிரர் – இமேஜ்
நடிப்புப் பயிற்சியைத் தொடங்கினார்.
சங்கரதாஸ் பிம்பமாகி
நோயாளிகள் கண்ணாடியாகியிருந்தனர்
இருமினார்
மூச்சுவிடத் திணறினார்
தரையில் நெளிந்தார்
கபம் கட்டிய நெஞ்சைப்பிடித்து
இருமியவர்
குரல் பயிற்சி என்றார்
பிம்பம் – கண்ணாடி வேறுபாடுகளற்று
நிகழ்ந்துகொண்டிருந்த நடிப்பு
பாசிடிவ் என வந்தது
இசை நாடகப் பாடலை பாடியபடி
கொரானா முகாமிலிருந்து
நாடகநில மருத்துவமனைக்குப்
பயணமானார்
சங்கரதாஸ்
கலைஞர்களின் பின்பாட்டுடன்.
……………………………………………………………………………………………………….
(4)
நட்சத்திரங்கள் ஒளிர்ந்த இரவின் தொடக்கத்தில்
அண்டங்கிடுகிடுங்க ஆகாசம் நடு நடுங்க
“ நான் யார் தெரியுமா …
என் பெற்றோர் யார் தெரியுமா….
சுழன்றாடியவரின் வியர்வைத் துளிகள்
மண்ணை நனைத்திருந்தன.
“ சொன்னாத்தானே தெரியும் ..
கேலியாகக் கேட்டக் கோமாளிக்கு
விழுந்தது சாட்டையடி….சட்டீர் சட்ட்டீர்…
அய்யோ யம்மா எனக் குதித்தக் கோமாளியும்
“ சரி சொல்லு ங்கொப்பா ஆரு ங்ங்ங்ங்கோ…..”
“ என்னடா ஓஓஓ……இழுக்குற…….சட்டீர் சட்டீர்
சாட்டை பின்பக்கத்தைப் பதம் பார்க்க
“ இல்ல இங்கொப்பா ஆரு ங்ங்கொம்மா ஆரு னு
சொன்னாத்தானே தெரியும்..”
அப்படிக்கேளு…….
“ ஆஆஆஆகாச பூமியெல்லாஆஆஆம்
ஒளியாய் இருக்கும் சூரியனார் எந்தனப்பா……” என்று பாடி
வலக்கை கொடுப்பது இடக்கை அறியாத
ராஜன் வந்தேன் கர்ண மகாராஜன் வந்தேன்…..ஓஓஓஓ ”
என்று இரவு முழுதும் ஆடினார்.
நட்சத்திரங்கள் அழிந்துபோன காலையில்
குத்தவைத்து அமர்ந்தவாறு
காசு இன்னைக்கேத் தந்துருவாங்களா
“ ஊட்ல பிள்ளைக்குப் பொண்ணுபாக்க வராங்க
போறப்ப வெறுங்கையோட போனா
கொன்னுறுவா பொஞ்சாதி…..பாத்து பண்ணச்சொல்லு ”
தரகரிடம் கை நீட்டி நிற்கிறார்
கர்ணன்..”
……………………………………………………………………………………………………….
(5)
“ ஊட்ல பழைய சொட்டர் இருந்தா கொடுங்…”
கணேசன் வாத்தியார்,
“ நிலமதிர ஆடும் கூத்துக்கலைஞருக்கு
தலையாட கரங்கள் விரல்களாட
மிருதங்கம் வாசித்தார்
தருமன் துயரத்திற்கு
கொகாலு வாசிக்கும்போது
கண்கள் பனித்தார்
வனப்பிரவேசக் காட்சிகளில்
கஞ்சிராவில் லயித்திருந்தார்
சில காசிகளுக்குக் கைகள் தட்டி
கோரசில் உரக்கப் பாடிக்கோண்டிருந்தார் – அவரே
துரியோதனனாகி குதித்தாடியபோது
பெருமரம் அசைந்ததைக் கண்டார்கள்.
கூத்து முடிந்து மக்கள் கலைந்துகொண்டிருக்கையில்
தன் அழுக்கு வேட்டியைப் போர்த்தியபடி நின்றிருந்தவரிடம்
ஊர்க்காரர்
“ என்ன கணேசா அமர்க்களப்படுத்திட்டே போ..”
வணக்கமுங் என நெளிந்தார்
“ புள்ளகுட்டி நல்லாருக்கா ” என்றதும்
அஆனுங் நல்லாருக்குதுங்
டேய் அய்யாவுக்கு வணக்கஞ்சொல்லு
பீமா , குந்தி என்றழைத்தபடி
போர்த்தியிருந்த வேட்டியை விலக்கினார்
கணேசனின் இரண்டு கால்களையும்
பீமனும் குந்தியும் கட்டிக்கொண்டிருந்தனர்
குளிரில் நடுங்கியபடி..”
……………………………………………………………………………………………………….
(6)
ஊரடங்குத் தளர்வின்
முதல் கூத்தில்
ஆடைகளும் வாளும்
கிரீடங்களுமாக
அத்தினாபுரம் எழுந்தது.
முகவீணையும் மிருதங்கமும்
இரவை சூடேற்ற
பதினெட்டாம் நாள் போர்
கர்ஜனைகளும்
ஆவேசப் பேச்சுமாக
ராஜாக்களும் ராணியரும்
கிராமத்தை அலங்கரித்தார்கள்.
கூத்து முடிந்து
கருமம் செய்த துரியனுக்கும்
தருமம் செய்த முதல்வனுக்கும்
ஜெயமங்களம்……
மங்களம்ம் மங்களம்ம்,,,,,,என்ற
மங்களப்பாடலின் போதே
கூத்திடத்திற்கு
ஆம்புலன்ஸ் வந்து நின்றது.
“ கோமாளிக்கலைஞனுக்கு கோவிட் தொற்று ”
“ எல்லாருக்கும் டெஸ்ட் எடுக்கணுங்க
இங்கெயே எடுத்துக்கலாம்
இவர மட்டும் இப்பவே கூட்டிட்டு போறோம்.”
உடல்மூடிகள் பேசினார்கள்.
“ ஏங்க மேக்கப் எல்லாம் அப்புறம் கலைச்சுக்கோங்க.
தள்ளி நில்லுங்க மொதல்ல..
வண்டிகிட்டெ வந்து நாக்க நீட்டிட்டுப் போயிருங்க.”
ஒப்பனையுடன்
மவுனமாய் நடந்து போய்
ஆம்புலன்சில் ஏறினார்
இரவைச் சிரிப்பாக்கித் துள்ளிய
கோமாளிக்கலைஞன்.
கோவிட் முகாமில்
ஜல் ஜல் ஜல் ஜல்
இசைந்துகொண்டிருக்கிறது
கோமாளியின் கால் சலங்கை.
– ராம்ராஜ்