இரண்டாம் அலை

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகப்போகிறது பெருந்தொற்றின் கொடிய காலம் தொடங்கி. மக்கள் கூட்டமே கொரொனாவிற்கு வாழ்வு என்ற நிலையில் கூட்டங்களைத்  தவிர்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் கூட்டம் இல்லாமல் விழாக்களா? விழாக்கள் இல்லாமல் கூத்துகளா? இத்தனை நாட்களாக கோயில் திருவிழாக்களோ அரசு விழாக்களோ, கலைவிழாக்களோ எதுவுமில்லை. இவைதான் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரமே. இன்று அவர்கள் முழுப் பட்டினி. கொரொனாவின் தொடக்க காலத்தை அல்லது முதல்அலையை யாராலும் யூகிக்க முடியவில்லை அல்லது முன் அனுபவம் இல்லை. எனவே அதை எதிர்கொள்ள எவருக்கும் வழி தெரியவில்லை. முட்டிமோதி ஒருவழியாக சமாளித்தாலும். ஒவ்வொரு தரப்பினருக்கும் நோயை எதிர்கொள்வதை விடவும் பெரிய சவாலாக இருந்தது பொருளாதார தேவையை சமாளிப்பது. அப்போது கொஞ்சம் கொஞ்சம் பணம் கையிருப்பு இருந்தது. சமாளித்தோம். கொடுமை அதோடு முடிந்துவிடும் என்று எண்ணினால் அலை தொடர்கிறது. இரண்டாம் அலை முன்பை விடவும் பெரும் வலி நிறைந்ததாக மாறியது. இந்த முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடைப்பட்ட நடுப்பகுதியில் அனைத்துத் துறைகளும் கொஞ்சம் இயங்க ஆரம்பித்தன. மெல்ல மெல்ல பணம் கைக்கு எட்டியது. மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி மூச்சு விட்டனர். அடுத்த அலைக்கு மனதளவில் தயாராகினர். ஆனால் இது எதுவும் நடக்க இயலாத ஒரு பகுதியினரும் இருந்தனர். அவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள்.

முதல் அலையில் தடைவிதிக்கப்பட்ட விழாக்கள் எதற்கும் இரண்டாம் அலை தாண்டி மூன்றாம் அலை தொடங்க உள்ள இந்த நேரம் வரை தளர்வளிக்கப்படவில்லை. இச்சூழலில் கலைஞர்கள் இரண்டாம் அலையை எதிர் கொண்டது சொல்லொண்ணாத் துயரம் மிகுந்தது. அந்தத் துன்பச் சமுத்திரத்தில் பற்றின்றித் தத்தளிக்கும் கலைஞர்களுக்கு ஒரு மரக்கட்டை மிதக்க போதுமானதாகப்பட்டது. ஆனால் அதுவே நிரந்தரத் தீர்வல்ல. முற்றான உதவியும் அல்ல. இச்சூழலில் அவர்களுக்கு உதவி செய்ய சிலர் முன்வந்தனர். அவர்கள் அளித்தத் தொகையைத் திரட்டி ஒப்படைப்பதற்காக கலைஞர்களிடம் அப்போது உரையாற்றினேன். அவற்றை அப்படியே அளிக்கிறேன்.

 ‘ஹலோ…’

 என்ற என் குரலுக்கு எதிர்முனையிலிருந்து ஒரு பெண் குரல்,

 ‘ஹலோ…’ என்றது.

 ‘வணக்கங்க வசந்தகுமாரி இருக்காங்களா?’ என்று உடனேயே,

 ‘சொல்லுங்க நான் வசந்தகுமாரிதான் பேசுறேன்.’

 என்ற அந்தக்குரலில் உச்சஸ்தாதி தெரிந்தது.

 ‘நீங்க நாடக கலைஞரா?’

 ‘ஆமாங்க.’

 இப்போது அந்தக் குரலில் ஒருவித தயக்கம் தெரிந்தது. தொடர்ந்து பேசத்தொடங்கினேன்,

‘நான் ஈரோட்டில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எங்க மாவட்ட தமிழ் ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து வறுமை நிலையில் இருக்கிற கலைஞர்களுக்காக நிதி உதவி அளிக்கலாம்ன்னு முடிவெடுத்திருக்கிறோம். அதான் அ.கா.பெருமாள் ஐயா கிட்ட அது தொடர்பா கேட்டிருந்தோம். ஐயாதான் உங்க எண்ணை கொடுத்தாங்க.’

 என்று முடித்ததுதான் தாமதம் நாLக்கலைஞர் வசந்தகுமாரியின் குரல் வேகமெடுக்கத் தொடங்கியது.

 ‘அய்யா புண்ணியமா போகும்யா ரெண்டு வருஷமா ரொம்ப கஷ்டம். எந்த ஒரு நாடக நிகழ்ச்சியும் இல்லைங்க. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நான் பெரும்பாலும் ராத்திரி நாடகத்துக்கு போயிடறதால பொண்ணுங்கள வீட்ல வச்சி பாதுகாக்க முடியல. மூத்தவளை அவ சின்ன வயசிலேயே கட்டி கொடுத்துட்டேன். அவளும் நாலு வருஷம் குடும்பம் நடத்திட்டு இரண்டு குழந்தையோட புருஷனை பறி கொடுத்து இப்ப எங் கூடவே வந்துட்டா. வீட்ல இப்போ நாலு பேரு. சின்னவளுக்கு இப்போ கல்யாணம் பண்ற வயசு. இப்போ சாப்பாட்டுக்கே வழியில்லை. இவ கலியாணத்தப் பத்தி எங்கய்யா நினைக்கிறது. ரேஷனில் அரிசி கொடுத்தாங்கையா. ஆனா வெறும் அரிசியை மட்டும் பொங்கி பொங்கி சாப்பிட முடியுங்களா? வாழ்வத்துப்போயி கிடக்கோம்முங்க. இப்ப திடீர்னு போன் பண்ணி உதவித்தொகை தர்றோம்ன்னு சொல்றீங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.’ எவ்வளவு வேகமாகத் தொடங்கியதோ அந்தக் குரல் இப்போது குழைந்து பணிந்து இறைஞ்சி நின்றது.

இது கலைக்கும் கலைஞனுக்கும் ஒரு சேரவந்த வேதனை. ஒருவாறு சுதாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினேன்.

 ‘இல்லம்மா நான் மட்டும் செய்யல. ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த உதவி செய்யறாங்க.’

இதற்கு மேல் அவரிடம் விளக்கிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. பசியில் இருப்பவனிடம் கதாகாலச் சேபம் நடத்திக் கொண்டிருப்பதுபோல் முட்டாள்தனம் இல்லை.

 ‘உதவி செய்றேன்னு சொன்ன உங்க எல்லாத்துக்கும் நன்றி சொல்லிக்கிறேங்க.’

 என்று சொல்லச்சொல்ல வசந்தகுமாரியின் குரல் இப்போது உடைந்திருந்தது. அவர்

அலைபேசியை துண்டித்தபோது என் காதோரம் அவர் கண்ணீரின் ஈரம் பிசுபிசுத்திருந்தது.

 இது கலைஞனின் கையறுநிலை. அவனைப் பாராட்டும் போது மட்டுமே நன்றி சொல்லிப்பழக்கப்பட்டவன் கலைஞன். வசந்தகுமாரி என்ற ஒற்றைக் கலைஞரிடம் நான் உரையாடிய நிகழ்வு இது. இதேபோல் கிட்டத்தட்ட இருபது கலைஞர்களிடம் உதவித்தொகை வழங்க பேசி இருப்பேன். அவர்களின் குரல்களும் குடும்பங்களும் மட்டும் வேறு வேறே ஒழிய, அனைவரின் கண்ணீரும் பசியும் ஒன்றாகவே இருந்தது.

“எங்க ஊர சுத்தி வயக்காடுங்க. இங்க இருக்கிற கிராமங்கள்ல ரெண்டு வருசமா அந்த விஷேசமும் இல்ல. எங்களுக்கும் கூத்து நிகழ்ச்சி இல்ல. சாமிக்கு படையல் இல்லங்கிறதால எங்களுக்குப் பசி இல்லாம போயுறுங்களா? பசி பொறுக்காம வயக்காட்டு வேலைக்காவது போயிறலாம்ன்னு நினைச்சா, ‘கூத்தாடுற நீ எப்படி வயக்காட்டு வேலை பாப்பன்னு’ சொல்லி கூலி வேலைக்கு கூட கூப்பிட மாட்டேங்குறாங்க. எல்லாரும் வீட்டுக்குள்ளயே கிடக்க யார்கிட்ட போய் கேட்கிறதுன்னு கூட தெரியலைங்க.” என்று கலங்கி நிற்கும் கூத்துக் கலைஞனின் குரலைக் கேட்கும் போது வாய்க்குள் செல்லும் ஒவ்வொரு கவளச் சோறும் நம் தொண்டைக்குழியை நெறிக்கிறது..

‘அவரு கூத்தாடுறவருங்க. போன வருஷம் ஒரு ஆக்சிடென்ட்ல செத்து போயிட்டாரு. எனக்கு நாலு பசங்க. இவங்கள எப்படி காப்பாத்தப்போறேன்னே தெரியல. ரேஷன் கடையில் கொடுத்த அரிசிய வச்சு கஞ்சி குடிச்சுட்டு உசுர புடிச்சு கிட்டு இருக்கேன்.’ கலைஞனை இழந்த ஒரு மனைவியின் கண்ணீர் இது.

 ‘கலியாணத்தை தள்ளிப் போட்டோம். ஆபரேஷனை கூட தள்ளிப் போட்டுட்டோம். பசியை எப்படி தள்ளிப்போடுறதுன்னு தெரியலங்க.’ என்றார் உதவி தொகையைப் பகிர்ந்து கொடுக்கும் அந்த ஊர்த் தலைவர்.

 இப்படி ஒவ்வொரு கலைஞனுக்குப் பின்னாலும் இருளடைந்த பக்கங்கள். இப்போது சின்ன வெளிச்சம் போதுமானதாக இருந்தது அவர்களுக்கு. ஒரு கலைஞருக்கு அரசு வழங்கும் உதவித்தொகை இரண்டாயிரம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பதினைந்து கலைஞர்களுக்கு முப்பதாயிரம் வழங்கலாம் என்று திட்டமிட்டோம். இதைச் செயல்படுத்த நினைக்கும் போது எனக்குள் ஒரு சின்ன நெருடல் கூட இருந்தது. இரண்டாயிரம் ரூபாய் அவர்களுக்கு போதுமானதாக இருக்குமா? என்று. ஆனால் இருப்பதில் இதுதான் சாத்தியமும் கூட. மெதுவாக வில்லிசைக் கலைஞர் தங்கமணியிடம் கேட்டும் விட்டேன். ‘இரண்டாயிரம் தான் எங்களால் இப்போதைக்கு முடியும். அது போதுமா’ என்று.

 ‘சார் இதுவரை உதவி செய்வதிலேயே அதிகபட்சமே இரண்டாயிரம் தான். கவர்மெண்ட் இரண்டாயிரம் கொடுத்துச்சு. அப்புறம் நீங்க கொடுக்குறீங்க. மத்தபடி ஆயிரம் ரூபாய்க்கு மேல யாரும் தந்ததில்லை சார்.’ என்றார். பணத்தின் மதிப்பு என்பது அது இருக்கும் இடத்தை பொறுத்து மாறுகிறது. இந்த சிறு வெளிச்சம் தான் அவர்களின் இருளை கிழிக்கிறது.

‘இன்றையச் சூழலில் உலகம் முழுவதும் கீழ்நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறக்கூடிய அபாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்’ என்கிறது ஐ.நா. இந்த கணக்கீடுகள் வெறும் பணத்தை மட்டும் அளவீடாக வைத்துதான் செய்யப்பட்டுள்ளது என்றால், அதை முறியடிக்க கொடுத்துதவிய அவர்கள் மனம் பெரியது. எதிர்பார்த்திருக்கவில்லை ஒரு வாரத்தில் ஆசிரியர்களிடமிருந்து இவ்வளவு பெரிய உதவித்தொகை வந்து சேரும் என்று. நாம் கேட்கும் முன்பே ஆசிரியர்கள் பலரும் பலருக்கும் கொடுத்து உதவி கொண்டிருக்கும்போது இன்னும் இன்னும் என்றால் எப்படி? என்ற ஐயம் எழுந்தது. ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் சக்தியையும் மீறி அளித்துதவினார்கள்.

 பாதாளம் வரை பாயும் பணம் ஒவ்வொரு கலைஞனின் வீட்டு பசியார பாய்ந்துள்ளது. மனிதச் சங்கிலியை உடைக்க வேண்டிய கட்டாயமும், அதே சங்கிலியை இணைக்க வேண்டிய தேவையும் ஒரே நேரத்தில் நடந்துள்ள முரணெதிர். இப்போது ஒரு பிடி கவளச் சோறு உறுத்தல் இல்லாமல் தொண்டைக்குள்ளே இறங்குகிறது.

 அரசு நாம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக செயல்படுகிறது. இதை எழுதிக் கொண்டிருக்கிற நாளில், மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் தமுஎகச ஏற்பாடு செய்திருந்த கலைஞர்களின் மாநாட்டில் நானும் கலந்து கொண்டிருந்தேன். கலைஞர்களின் கோரிக்கைகளை கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர். நிவாரணம் மிக விரைவாக கலைஞர்களைச் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. அதுவரைக்குமான சிறிய உதவியை நாம் செய்திருக்கிறோம். கலைஞர்கள் நன்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள். உதவி செய்வதற்காக இணைத்துப் பிடித்த கரங்களை இறுக்கிப் பிடித்து இந்தக் கொடிய காலத்தைக் கடப்போம்.

அற்றார் அழிபசி தீர்க்க திரண்டெழுந்த நல்லுள்ளங்கள் கலையைக் காக்க உதவியுள்ளது.

இச்சமயத்தில் உதவி செய்ய நம்மோடு இணைந்து நின்ற ஈரோடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்திற்கும், விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு, செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி ஈரோடு, மற்றும் திருமதி சிவானந்தி கணேசராயன், ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறை லண்டன், அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்.. நம் பணி இன்னும் நிறைவடையவில்லை.

 ‘மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ காத்திருப்போம் கொடுப்பதற்கு.

– செழியன் கோ