நான் வளர்மதியை வாசித்ததன் விளைவாக நினைவில் வருவன..

எனக்கென்னமோ இந்தக் கட்டுரையை எழுதுவது அவ்வளவு சுலபமான ஒன்றாகத் தெரியவில்லை. இந்த கதைக்கும் – எனக்கும் – என் மண்ணுக்கும் ஒரு பந்தம் இறுகப் பிணைந்துள்ளது. பிரதியை வாசிக்கின்ற பொழுதுகளில் ஏன் என் சித்தம் பேதலிக்கிறது. அப்படியொன்றும் பெரிதாக இல்லை என்று பல தடவை என்னை நானே தேற்றிக் கொள்ளும் மனநிலையில் இப்போது நான் இல்லை. நாடக அரங்கை நேசிக்கிற ஒரு கலைஞனாய் இந்தக் கட்டுரையை எழுத வக்கற்றுப் போகிறேன். ஏன் என்றால் நான் வளர்மதியின் தேசத்தான். “ஓ.. கடவுளே நான் எப்படி நினைக்க..? எப்படி மறக்க..”எங்கள் மண்ணும் அந்த நாட்களும்…

வளர்மதியைப்பற்றி எங்கிருந்து தொடங்கலாம்?ஒரு பெண் என்பதிலிருந்தா? அல்லது ஈழத்துப் பெண் என்பதிலிருந்தா? இங்கு பெண் -ஈழத்துப் பெண் இந்த இரண்டுக்குமான இடைவெளியை நிரப்பும் பணி உங்களைப் பொறுத்தது. அது அப்படியிருக்க, வளர்மதியை அரசியலில் தொடங்கலாமா?இல்லை இந்த சமூகம் மீதான தார்மீகக் கோபமுடைய , பிறர் ஈனநிலை கண்டு துள்ளும் ஒரு கலை ஆன்மாவிலிருந்து தொடங்கலாமா? எங்கிருந்து தொடங்கினும் எல்லாமும் ஒரு கறுப்பு வெளிச்சத்தில் காணாமல் போய்விடுகிறதே.

நிச்சயமாக அந்த கறுப்பு வெளிச்சத்திலிருந்தே தொடங்கலாம். நாடகமும் அப்படித்தான் தொடங்குகிறது. வளர்மதியைப் பேச, நிச்சயம் அவள் ஒரு பெண்ணாக இருக்கவேண்டிய அவசியமில்லை. வக்கிரங்களைப் பிரயோகிக்கும் கொடூர மனநிலைகளின் முன் அவள் ஒரு பெண்ணாக அடையாளப்படலாம். சமூகச் செருக்கும் இலட்சியப் பற்றுறுதியும் கொண்ட மனநிலைக்கு பால்பேதம் கிடையாது.என்ன செய்வது ஒப்பீட்டளவில் இந்த உலகு வக்கிரங்களால் நிரம்பி வழியும் அதிகார மணிமுடிகளைச் சூடியவர்களின் கைகளில் தானே சுழல்கிறது.அவளைப் பெண்ணாக பார்ப்பதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

ஞா.கோபி அவர்களின் “நான் வளர்மதி” நாடகத்தில் வருகிற வளர்மதிதான்  நிஜத்திலும் வளர்மதி. பாரதி சொன்ன புதுமைப் பெண்களை ஈழ தேசம் உருவாக்கிக் கொண்டிருந்த காலப்பகுதி அது. வளர்மதி போன்றவர்கள் அந்தக் காலத்தை வசப்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதை தயக்கமில்லாமல் சொல்லுமளவுக்கு அந்த நினைவுகள் பசுமையாய் இன்றும் எம் மனங்களில் உறைந்துள்ளது. போராட்டம் என்பது ஒரு குணம். அது ஆயுதங்களுக்கும் அப்பாற்பட்டதுதானே. அந்த மனவெழுச்சி ஒவ்வொரு தமிழ் மனங்களுக்குள்ளும் எரிந்து கொண்டிருந்த காலம் அது. வடிவங்களால் வேறுபட்டு எண்ணங்களால் ஒருமைப்பட்ட ஆரோக்கிய செயல்வாதம் எங்கள் மண்ணுக்கும் இருந்தது.

அதுவும் “வளர்மதி” நாடகச் சிந்தனை கொண்ட செயல்வாதி. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் மனம் வாடும் குணம் சமூக கலைஞர்களுக்கு உள்ளுக்குள் கலந்த பண்பு அல்லவா? வளர்மதி மட்டும் என்ன விதிவிலக்கா? அந்த வலுவுள்ள மனதோடுதான் கல்வியின் பொருட்டு தமிழ்நாடு வந்தவள்.

“நான் வளர்மதி” நாடகத்தின் ஆசிரியருக்கும்; வளர்மதிக்கும் தமிழ் நாட்டு கல்விச் சூழல் ஏற்படுத்திய நட்புறவும், மனக்கிடைக்கையின் உன்னத பகிர்வுகளும், வளர்மதியின் வாழ்வை தரிசிக்க ஆசிரியருக்கு ஏதுவாய் அமைந்திருப்பதை எழுத்துரு வெளிப்படுத்தி நிற்கிறது. அருகிருந்து வாழ்ந்த இரு அரங்கத் தோழமைகளின் சமூகப் புரிதலுக்கும், அநீதியின் பொருட்டு அந்த தோழமையின் இலட்சிய கனவு சிதைவுறும் நேரத்தில் தூரதேசத்திலிருந்து அங்கலாய்க்கும் ஆற்றா மனதின் ஆழ்துயரை ஆற்றுகையாக்கும் விளைவு அரங்கை ஆயுதமாக்கியுள்ளது.

நாடகத்தில் வெளிப்படும் சொற்களும்; வசனமும் போதுமாய் இருக்கிறது. ஆசிரியருக்கும் வளர்மதிக்கும் இடைப்பட்ட கலந்துரையாடல்களில் எவற்றையெல்லாம் வளர்மதி பகிர்ந்துகொண்டிருப்பாள் என்பதற்கு. மறுபுறம் பார்த்தால் ஒரு தோழனாய் அல்லது நாடக ஆசிரியனாய் வளர்மதியினூடாக ஈழத்து அரசியலையும் வாழ்வையும் எந்தளவுக்கு உணர்ந்துள்ளார் என்பதை, செம்மண், மருதமரம், நூலக எரிப்பு, சோதனைச்சாவடி, பறை,னுநயவா ஊநசவகைiஉயவந, அகிம்சைப் போராட்டம், பொட்டு, புத்தர், மூட்டை முடிச்சு, எல்லை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் “பாலியாறு” போன்ற சொற்கள் போதுமானதாய் அமைகிறது.

இந் நாடகத்தைப் பற்றி பேச இச்சொற்களைத் தவிர வேறு எதுவும் இப்போதைக்கு எனக்கு தேவைப்படாது என நினைக்கிறேன். இந்த சொற்களை வைத்து எங்கள் மண்ணில் நடந்த ஆயிரக்கணக்கான கதைகளை சொல்லமுடியும். செம்மண் நினைவுபடுத்தும் எங்கள் தெருவும், அந்த செம்மணி படுகொலையும், மருதமரம் தரும் வன்னிப்பிரதேசத்தின் தெருவும், சோதனைச்சாவடியின் அனுபவங்களும், பறைமேளத் திருவிழாவும், இறக்காதவர்களுக்கும் னுநயவா ஊநசவகைiஉயவந எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட எம் வாழ்வும், கொல்லப்பட்ட கணவனின் செய்தியறியாமல் நம்பிக்கையில் புலரும் ஒவ்வொரு காலையிலும் நெற்றியில் பொட்டு வைக்கும் பெண்களும், அகிம்சைப் போராட்டம் தோற்றுப்போன அரசியலும் இப்படிப் பல.. ஒவொன்றையும் தனியாக எழுதும் இடம் இதுவல்ல.

புத்தரின் பிள்ளைகளால் தோற்றுப் போன பௌத்த நெறியும், குண்டு வீழும் நேரமெல்லாம் மூட்டை முடிச்சுகளைச் சுமந்த கால் நடை பயணங்களும், எல்லையைக் காக்க, இழந்த எம் சோதரர்களையும், எல்லாவற்றுக்கும் மேலாய் பாலியாறு கண்ட வரலாறுகளையும் சொல்லி மாளாது.

கோபியிடம் இந்தச் சொற்கள் எப்படி வந்து மாட்டிக் கொண்டன என வியக்கிறேன். எதற்காக இந்தச் சொற்களை அவர் பாவித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்தச் சொற்கள் தரும் அர்த்தப்பாடுகளுக்கும் வலிகளுக்கும் ஒத்தடம் கொடுக்க இப்போதைக்கு என்னால் முடியவில்லை.

ஒவ்வொரு சொல்லும் ஈழத்தமிழரின் இன விடுதலைப் போராட்டத்திலிருந்து தவிர்க்கமுடியாதவைகள் -தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுதவும் முடியாது.

இப்போது எண்ணிப் பார்க்கிறேன் “நான் வளர்மதி” நாடகம் வளர்மதியின் சிறை உணர்வுகளை மட்டுமா பேசியது? நெடுங்கால நீட்சியின் பெரும் அரசியலை அல்லவா பேசிவிட்டுப் போயுள்ளது. இந் நாடகத்தில் வரும் புத்தர், நூலக எரிப்பு போன்ற சம்பவங்களின் நினைவுகள் நுஃமானின் கவிதையினை நினைவுபடுத்தி விடுகிறது.

நேற்று என் கனவில் புத்தபெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை தரித்த அரச காவலர் அவரைக் கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில் அமைச்சர்கள்வந்தனர்

எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை பின் ஏன்

கொன்றீர்? என்று சினந்தனர்.

இல்லை ஐயா தவறுகள் எதுவும் நிகழவே இல்லை.

இவரை சுடாமல் ஓர் ஈயினைக்கூட சுட முடியாது போயிற்று எம்மால்

என்றனர்.

தொடரும் கவிதையில்…

சிவில் உடையாளர்கள்புத்தரின் பிணத்தை உள்ளே

இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகத்தினால் புத்தரின் மேனியை

மூடிமறைத்தனர்

சிகாலோகவாதச் சூத்திரத்தை கொளுத்தி எரித்தனர்

புத்தரின் சடலம் அஸ்தியானது.தம்மபதமும் சாம்பலானது.

என்று முடிகிறது அந்தக் கவிதை.

ஈழத்தின் போர்ச்சூழலில் எழுந்த இலக்கியங்களில் போர் வாழ்வுடன் சார்ந்த ஊரும், பெயரும்,பொருளும் செல்வாக்கு செலுத்தியிருந்தது. “நான் வளர்மதியில்” ஆசிரியர் நினைத்தவொன்றைச் சொல்ல முயலும் போது ஈழ தேசத்திற்கும் சூழலுக்கும் பொருந்தும் அந்தச் சொற்கள் பல இடங்களை நினைவுபடுத்திவிடுகிறது. எப்படி சாத்தியமாயிற்று  இந்த குறிச்சொற்கள். அது படைப்பாளருக்கே உரித்தான அலை அதிர்வுதான். ஒரு வகையில் எம் வாழ்வோடு பயணப்பட்டு வந்த ஒவ்வொன்றும் அடையாளமாகிவிட்டது. நிலாந்தனின் கவிதையில் பாலியாறு இப்படி…

வண்ணத்துப்பூச்சிகள் கதிர்காமம்

போகும் வழிகளையெல்லாம்

அவர்கள் விடுவிப்பார்கள்

பாலியாற்றின் மெலிந்த தீரங்களில்

பழி கிடக்கும் மக்களை

அவர்கள் விடுவிப்பார்கள்

பறையும் உடுக்கும் சேர்ந்தொலிக்கின்றன….

... ஜெயபாலன் படைப்பில்

ஆனாலும் அமைதியாய்

பாலியாறு நகர்கிறது.

அந்நாளில் பண்டாரவன்னியன்

படை நடந்த அடிச்சுவடு

இந்நாளும் இம்மண்ணில்

இருக்கவே செய்யும்

என பாலியாறு பதிவாகிறது. பாலியாறு போலவே அருகே இருக்கும் மணலாறுக்கும்   இப்படி வரலாற்றுச் சம்பவங்கள் உண்டு. இன்று மணலாறு “வெலி ஓயா” எனும் சிங்களப் பெயரால் ஆக்கரமிக்கப்பட்டுள்ளது. அரசமரத்தடி பிள்ளையார் புத்தராக மாறிய அதிசயத்திலிருந்து நாம் மீளமுன் நாளை பாலியாற்றுக்கு என்னவாகுமோ தெரியவில்லை இப்படி படைப்புக்களிலேனும் வாழட்டும் எம் தேசத்தின் அடையாளங்கள்.

எமது அரசியலை வைத்து காய்நகர்த்தும்  உலக நாடுகளின் போலியை இன்னமும் எம் மக்கள் நம்புகிறார்கள் என்பதை நினைக்கும் போது பாவம் அவர்கள், இறக்கும் வரையும் வெள்ளந்தி மனிதர்களாகவே இறக்கப்போகிறார்கள். ஆசிரியரின் காட்சிப்படிமத்தில் சீட்டுக்கட்டுடன் அலையும் அந்த உலக  வல்லரசுகளை நோக்கித் தீர்வு தாருங்கள் என்று  புலம்பி வீணீர் வடியும் வாய்களுடன் வீதியில் கொடி பிடித்து அழுகின்ற மக்கள், நிறவெறியில் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட “ஜோர்ச் பிளோயிட்டின்”; கதையை இன்னுமே உணரவில்லை. நிறவெறி கொண்ட நாட்டிடம் தானே இனவெறியால் பாதிக்கப்பட்ட எமக்கான சர்வதேச விசாரணையை வேண்டிநிற்கிறோம்.

இந் நாடகத்தின் வசனங்கள் வலிமையானவை. பொதிந்து கிடக்கும் பொருள் தரும் உணர்வுகளைச் சம்பவங்களின் சாட்சிகளாக எஞ்சி நிற்கும் ஈழ தேசத்தவர்களின் பார்வையில் பல எண்ணவலைகளை உசுப்பிவிட வல்லன. இந் நாடகத்தினை அலசி ஆராய பலது இருப்பினும், இப்பிரதியின் வழியே உருவாகும் நினைவுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகவேனும் சொல்லிவிட உணர்வு முந்துகிறது.

தன் தேசத்திற்கு தேவையான அரங்கை செயல்படுத்தும் முனைப்புடன் தமிழ்நாட்டிலிருந்து கல்வியை முடித்து மீண்டும் தேசம் செல்லும் வளர்மதி தனக்கே உரித்தான போர்க் குணத்துடன் செயலாற்றும் காலப்பகுதியில்தான் அந்த சம்பவம் நிகழ்கின்றது.

தமிழ் மக்கள் மீதான வன்முறைகளும் நெருக்கடிகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காலத்தில் கருத்துச் சுதந்திரம் தடைப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் ஊடகமும் ஊடகவியலாளர்களும் அடக்குமுறைக்குள்ளிருந்து சரி – பிழைகளைப் பேசவேண்டிய இடர்மிகுந்த சூழ்நிலை காணப்பட்டது. அப்படியொரு காலப்பகுதியில் தான் ஜே. எஸ். திசைநாயகம் என்கின்ற ஊடகவியலாளரினால் எழுதப்பட்ட கட்டுரை இலங்கை அரசினை கேள்விக்குட்படுத்துவதாய் அமைந்திருந்ததாக சொல்லப்பட்டு கைது செய்யப்படுகிறார். இக்கட்டுரை வளர்மதியின் கணவரான ஜெசிகரனுடைய பதிப்பக்கத்தினால் வெளியிடப்பட்டதன் காரணத்தினால் வளர்மதியும் ஜெசிகரனும் கட்டுரையாளருக்கு உடந்தையானவர்கள் என்றும் இவ்வாறான செயற்பாடு தமிழ் தேசிய விடுதலை போராட்டத்திற்கு சார்பானது எனும் தொனியில் வளர்மதியும் அவருடைய கணவனும் கைது செய்யப்படுகின்றனர். இலங்கையில் “பயங்கரவாத தடைச்சட்டத்தின்”கீழ் நிகழ்ந்த முதல் கைது இது எனவும் பதிவாகிறது. இந்த சம்பவத்தின்பின் உள்ள அதிகாரம், அடக்குமுறை, ஜனநாயகம், சுதந்திர மனநிலை, ஒரு இனத்தின் இருப்பு, நீதித்துறையின் சமாந்திரத்தின் மீதான கேள்வி என்பவற்றை கேள்விக்குட்படுத்துவதாய் குமுறும் மனதின் வெளிப்பாடுகளாக இந்த நாடகம் பிறந்திருக்கிறது.

கருத்துச் சுதந்திரம், ஊடகம் சம்பந்தப்பட்ட அத்துமீறல்கள் எங்கள் மண்ணில் நூற்றுக்கணக்கானவைகள் உள்ளன. அவை கொடூரங்களினதும் கொடூரமானவைகள். வளர்தமதியைப் பேச கோபி துணிந்தார். ஏனையவைகளைப் பேச, எம் மண்ணில் இன்னுமே திராணியவற்றவர்களாய்த்தான் நாம் இன்னமும் இருக்கிறோம். இக்கதையைப் பொதுவெளியில் பேச இவ்வாசிரியருக்குக் கிடைத்த கருத்துச் சுதந்திரத்தின் அளவுக்குக் கூட வளர்மதியின் தேசத்திற்கு கிடைக்கவில்லையே.

பத்திரிக்கையாளர்கள் சுடப்படுதல் , கடத்தப்படுதல், காணாமலாக்கப்படுதல், அலுவலகங்கள் தீக்கரையாக்கப்படுதல், அடித்து நொறுக்கப்படுதல், குண்டு வீசப்படுதல், போன்றவை மிக சர்வசாதாரணமாக நாம் கண்டு கொண்டவைகள். ஊடகத் துறைக்கு மட்டுமல்ல, தன் சமூகம் மீதான பற்றுக் கொண்ட ஒவ்வொரு செயலாளிக்கும் பொருந்தும்.

“எனக்கு தெரியுது, இந்த மதிலுக்கு அந்தப்பக்கம் என்னோட னநயவா உநசவகைiஉயவந தயாராயிடுச்சி 12.05.2007 ல நான் கைதியானேன்” என வளர்மதியினூடாக ஆசிரியர் தரும் இந்த வசனத்தின் நிதர்சனத்திற்கு உதாரணம் எம்மிடம் நிறையவே உள்ளது.

நடுநிலையுடன் அரசின் அதிகாரப் போக்குகளையும் கறுப்பு பக்கங்களையும் வெளிக்கொண்டு வந்த சிங்கள ஊடகவியலாளர்கள் கூட கொல்லப்பட்டு காணமலாக்கப்பட்டும் உள்ளனர். இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வாக்கு மூலப் பதிவு இது. “மரணத்தின் பாதையை நான் அறிவேன்” என்ற தலைப்பில் “சண்டே லீடர்”பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரம துங்க எழுதிய ஆசிரியர் தலையங்கம்.

“ என் மரணத்தின் பாதையை நான் அறிவேன் நீ போலியான சத்தத்தை எழுப்பிக் கொண்டு போலீசை அழைத்து விசாரணை மேற்கொள்வாய். கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணையைப் போலவே இப்போதும் நடக்கும். ஆனால் ஒன்றும் வெளியில் வராது. நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று……

உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை  எந்தநேரத்திலும் உன்னால் மறக்க முடியாது. என் மறைவு சுதந்திரத்தை வீழ்த்தாது.இதற்காக போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும்”

எனத் தொடங்குகிறது. அந்த ஆசிரியர் தலையங்கம்.

2009 ஜனவரி 11ம் திகதி வெளியாகவிருந்த பத்திரிக்கைகாக இந்த தலையங்கத்தினை ஜனவரி 7ம் திகதி எழுதி வைத்திருந்தார். ஜனவரி 8ம் திகதி காலை லசந்த சுட்டு கொல்லப்படுகிறார்.

இதனை இங்கு சொல்ல வேண்டியதன் மனவுணர்வை என்னால் தடுக்க முடியவில்லை. இப்படி பல கதைகள்… ஒவ்வொரு சமூக புரட்சியாளனும் அவர்களின் முடிவு பற்றி அறிந்தே உரிமைக்காய் தம்மை இழந்தனர். அவ்வாறு தராக்கி சிவராம், சத்தியமூர்த்தி , நடேசன், நிமலராஜன், ரிச்சர்ட்டி சொய்சா, என நீள்கிறது. அந்த பட்டியல் 2005ம் ஆண்டிலிருந்து 2015க்குட்ப்பட்ட 10 வருட காலப்பகுதியில் 35க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதான விபரங்களும் அறியப்படுகிறது.

இங்கு “நான் வளர்மதி” நாடகம் இவற்றின் நினைவுகளை தொண்டைக்குழியில் சிக்க வைத்து அந்த சூழ்நிலைக்குள் வாழ்ந்த எமது வாழ்வனுபவங்களை மீட்டி ஆன்மாவை அந்தரிக்கச் செய்கிறது. 

இந்த நாடகத்தில் பின்னான சிறைக்காலம் தருகின்ற மன உணர்வும் சிதைக்கப்பட்ட வாழ்வின் கனவுகளையும, மனதுக்குள் ஓங்கி அறையும் வலியின் கோபத்தினையும் ஆசிரியர் சொல்லி விட்டார். அந்த சிறையிருப்பின் யதார்த்த உணர்வின் இன்னொரு பக்கத்தினை எந்த வரிகளால் சொல்லலாம். எல்லா சிறையிருப்புக்கும் கைதுக்கும், எல்லோரும் அறிந்த பொதுப்பண்பு ஒன்றுள்ளது என்றால, இலங்கையில் அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கைதும் சிறையும் தரும் அனுபவங்களை ஒரு சினிமா புரிதலாக கூட அறியமுடியாதளவுக்கு வக்கிரம் நிறைந்திருக்கும். எல்லோரும் எல்லாவற்றையும் அப்படியே பதிவு செய்துவிடுவதில்லை. இந்த பயங்கரவாத தடைசட்டம் ஒரு இனத்தின் மீதான வலைவிரிப்பாக இருப்பதுதான்  ஈழத்தமிழர் வரித்துக்கொண்ட சாபமாகியது. போர் ஓய்ந்த பின்பும் கூட தமது பிள்ளைகளின் கல்லறைகள் அடையாளங்கூட இல்லாமல் செய்யப்பட்டு அவர்களை நினைவுகூற மறுக்கப்பட்டிருக்கும் இக்காலத்தைதான் சமாதான காலம், நல்லிணக்க காலம் என பறைகிறார்கள்.

எத்தனையோ வளர்மதிகளை தேசம் விட்டு தேசம் புலம் பெயர வைத்தனர். இந்த மண் தன் பசளைகளை இன்றைக்கும் இழந்து கொண்டு தான் இருக்கிறது. “ நான் வளர்மதி” நாடகம் தமிழகத்தில் நடந்தேறியது. அண்டை தேசத்தில் உள்ள சக உறவுச் சமூகத்தின் பாடுகளை அரங்கின் வழியாக தந்த ஆற்றுகையாக அது வெளிவந்தது. 2009 மே 30ம் திகதி இந் நாடகம் மேடையேறுகிறது. 2009 மே 18 எங்கள் தேசத்தில் எல்லாம் முடிவுற்றாயிற்று. எல்லாம் என்றால்? எல்லாமும் தான். மக்கள் ஏதிலிகளாக தெருவில் நின்றார்கள். வைத்திய சாலை முற்றத்து வெளியில் எல்லாம் குருதிகள் பீறிடும் அரை உயிர் பிணங்கள் குவிந்து கிடந்தன. காணமலாக்கப்பட்டவர்கள், விதவைகள், தாய்தந்தையை இழந்தோர் என அந்த மே மாத காலத்தில் எமது தேசம் இருண்டு கிடந்தது. இன்னமும்தான் விடியவில்லை. அப்படியொரு காலத்தில் இப்படி ஒரு கதை கோபி அவர்களால் அரங்கேறியது எனும் போது, ஒரு காலத்துயரை அதே காலத்தில் ஆற்றிய பணியை நெஞ்சில் நிறுத்திக் கொள்கிறோம்.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்காகப் பிரதியை வாசித்தேன். இப்படி எழுதுவதாக தொடங்கவில்லை எனினும் “நான் வளர்மதி” தந்த உணர்வுகளை கட்டுரை உருவத்திற்கு மீறி நினைத்தவற்றையெல்லாம் புலம்புவதாய் அமைக்க வேண்டியதாயிற்று. இது ஒரு கழிவிரக்கம் தான் ஒரு ஆற்றுகை ஒரு பிரதி ஒரு அழகியல் என்பதைக் கடந்து கோபி அவர்களின் எழுத்தும் அது பேசும் பொருளும் ஆத்ம வலியை உண்டுபண்ணியது என்பதற்கான சான்று தான் இந்தப் புலம்பல். நினைந்தழுது நினைந்தழுது நினைவழியா நாட்களைச் சுமக்கின்ற இந் நேரத்தில் சேரனின் அக் கவிதை நினைவில் குத்துகிறது.

என்ன நிகழ்ந்தது

எனது நகரம் எரிக்கப்பட்டது

எனது மக்கள் முகங்களை

இழந்தனர்

எனது நிலம் எனது காற்று

எல்லாவற்றிலும்

அன்னியப் பதிவு.

கைகளைப் பின்புறம் இறுக்கிக் கட்டி

யாருக்காக காத்திருந்தீர்கள்?

முகில்கள் மீது நெருப்பு

தன் சேதி எழுதியாயிற்று

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து

எழுந்து வருக.

அருந்தவநாதன் பிரசாந்த், வவுனியா, இலங்கை