நாடகமும்… நானும்… (6)

கண்கள், முகம் மற்றும் குரல் வாயிலாக, ஒரு கதாபாத்திரம்  தன்னை வெளிப்படுத்துவதற்காக  வெகு சுலபமாக வழி காண்கிறது. கண்களால் வெளிப்படுத்த முடியாதவற்றை, வார்த்தைகள், பேச்சு, தொனியின் மூலம் குரல் வெளிப்படுத்துகிறது. நடிகரின் உணர்வுகள் மற்றும் சிந்தனையை, சைகைகள் மற்றும் உடல் அசைவுகள் வலுப்படுத்தி ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்கின்றன. உடல் சார்ந்த இந்த நடவடிக்கைகள், நடிகரின் படைப்புத் திறன் முனைப்பின் விளைவாக, இறுதியில் நிகழ்வாக முடிசூட்டப்படுகின்றன.

உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை, புலப்படக் கூடிய தசை அசைவுகள் இல்லாமல், கண்களும் முகமும் பேசும் மிகவும்  நுட்பமான மொழி, வெளிப்படுத்துகிறது. தசைகள், முழுமையாகவும் நேரடியாகவும் உணர்வுக்குத் துணை நிற்க வேண்டும். தன்னிச்சையாகவோ, இயந்திர கதியிலோ கண்கள் மற்றும் முகத்தின் தசைகள்—கோபம், பரவசம் அல்லது நடுக்கம் அல்லது திணிக்கப்படும் வேறுவிதமான உணர்வுகள் காரணமாக—இறுக்கமடையும்போது நுட்பமான, புலப்படாத ‘அந்த மொழி’ சிதைந்துவிடுகிறது.

எனவே, நுணுக்கமான பார்வை மற்றும் முக பாகங்களைத் தசைகளில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத அசைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஒரு நடிகர் முதலில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

                                                               –கான்ஸ்தன்தீன்  ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.

1982 ல் எனது குடும்பச் சூழ்நிலையின் காரணமாக  நான் நகரத்திலிருந்து விலகி சற்றுத் தொலைவில் வாழவேண்டி வந்தது. அந்த நேரத்தில் எனது ஸ்ருஷ்டி குழுவினர் எல்லோரும் நகரத்திலிருந்ததால் அவர்களோடு இணைந்து என்னால் நாடக ஆக்கங்களில் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது. மிகுந்த  வருத்தமும் மனச்சோர்வும் ஏற்பட்டபோதும் எதுவும் செய்யவியலாத கையறு நிலை. குடும்பச் சுமைகள் தொடர்ந்தன. பல முயற்சிகள் எடுத்தும் நான் தோற்றுப்போனேன்.  ஏறக்குறைய 20 ஆண்டுகள் எதுவும் இயங்க முடியவில்லை. அந்தக் குற்றவுணர்ச்சி இன்றளவும் எனக்குள்ளே இருந்து வருகிறது. அதன்பிறகு 2001ல் எனது கல்லூரித்தோழர்  ‘ஞானவேலு’  எனக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வேலையைச் செய்தார். அவர் பணிபுரிந்த இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ‘காட்சி தொடர்பியல் துறை’  மாணவர்களுக்கு நடிப்புக்கான  பயிற்சிப்பட்டறை நடத்தும்படி என்னை அழைத்தார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பிற்குள் வந்தேன். அந்த மாணவர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சிப்பட்டறை நடத்தினேன். அந்த நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கவும், தொடங்கி வைக்கவும்  ‘புவியரசு அண்ணா”வையும் அழைத்திருந்தேன். மிக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்த அந்தப்பட்டறை  நிகழ்வுக்குப்பிறகு அந்தக் கல்லூரியில் தொடர்ந்து எல்லா ஆண்டுகளும் பட்டறை நடத்தினேன். அதைத்தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளிலும் நாடகப்பட்டறைகளை நடத்திக் கொடுக்கும்படி கேட்டு அழைப்புகள் வந்தன. நாடகங்களை இயக்க முடியாத சூழலில் எனக்கென தனியாக ஒரு குழு இல்லாத நேரத்தில் ஏதோவொரு வடிவத்தில் நாடகம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளுக்குக் சென்று நிறைய மாணவர்களைச் சந்திக்கும்  வாய்ப்புக் கிடைத்தது.  அந்தப்பணி இன்று வரையிலும் தொடர்கிறது.

 இந்தச் சூழலில்தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோழர்கள் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பயிற்சிப்பட்டறை  நடத்தித் தரும்படி கேட்டார்கள். சிறுவர்களுக்கான பயிற்சிப்பட்டறையை  டாக்டர் வேலு சரவணன் அவர்களுக்கும் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு  நானும் பயிற்சி கொடுத்தோம். வேலு சரவணன் என்கிற மகத்தான கலைஞனோடு இணைந்து  பணியாற்றின அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாதது.  பயிற்சிப்பட்டறை முடிந்து அவரது மாணவர்கள் காரமடை அருகேயுள்ள பெட்டதாபுரம் என்னும் கிராமத்தில் அவரது ‘பல்லி, தேவலோக யானை’ நாடகங்களை நடத்தினார்கள். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களை வைத்து பேராசிரியர் திலீப்குமார் (இந்துஸ்தான் கல்லூரி) அவர்கள் எழுதின ‘ விடுதலை’ (ஏர்வாடி மன நலக்காப்பகத்தில் நடந்த தீ விபத்தைப் பற்றி ) என்கிற நாடகத்தை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வீதி நாடகமாக வெற்றிகரமாக நடத்தினோம். அடுத்த ஆண்டு  கோவை கோபால் நாயுடு மேல் நிலைப்பள்ளியில்  வேலு சரவணனோடு இணைந்து ஒரு நாடகப்பட்டறையையும் மிகச்சிறப்பானதொரு நாடகவிழாவையும்  நடத்தினோம்.

புவியரசு அண்ணா அவர்கள் அன்புத் தோழர் ராமராஜ் பற்றி என்னிடம் சொன்னார். கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகின்ற இளைஞர் ஒருவர் நவீன நாடகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நீங்கள் அவசியம் தொடர்பு கொள்ளுங்கள் என்று. அப்படித்தான் நான் தேடிச்சென்று அறிமுகம் செய்துகொண்டேன்.  அன்று முதல் இன்று வரை அன்புத்தோழர் ராமராஜுடன் நாடக செயல்பாடுகளில் பல்வேறு தளங்களில் செயல்படுகின்ற நல்லதொரு வாய்ப்பு அமைந்தது. இரண்டுமுறை அவரது மாணவர்களுக்குப் பயிற்சிபட்டறை நடத்தினதும்  அன்புத்தோழர் முருகபூபதி அவர்களின்  அறிமுகம் ஏற்பட்டது.  அவரது “மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி”, ‘’நீர் நாடோடிகள்” போன்ற நாடகங்களின் ஆக்கத்தின்போதும் அந்த  நாடகங்கள் அரங்கேறும்போதும்  உடனிருந்தது இனிமையான அனுபவங்களாக அமைந்தன. தரணி அவர்களின் ‘உடல்வெளி அமைப்பின் நல்ல நாடகங்களைக் காணவும் அந்தக் கலைஞர்களோடு அறிமுகமும் எனது தொடர்ச்சியான நாடக செயல்பாடுகளுக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தன. இப்போது ஆடியில் எனது நாடக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் அருமையானதொரு வாய்ப்பும் அமைந்தது.

இதற்கிடையில் சென்னையிலிருந்து நண்பர் ஒருவர் மூலமாக ஒரு அழைப்பு வந்தது. ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இலங்கைத்தமிழர் ‘நிருமலன்’ அவர்கள் ‘கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்’ திரையிட  “UNLOCK’’ (முல்லைத்தீவில் நடந்த இன அழிப்பில் சிக்கி சீரழிந்த  இளம் மாணவர்கள் பற்றின கதை) என்கிற குறும்படத்தை தயாரிக்கிறார்கள் அந்தப்படத்தில் நடிக்கும் பத்து சிறுவர்களுக்கு நடிப்புப்பயிற்சி கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். சென்னையில் ஏழு நாட்கள்  நடிப்புப் பயிற்சியும், தஞ்சையில் மூன்று  நாட்கள் படப்பிடிப்புமாக  மிகச்சிறந்த ஒரு அனுபவம் அமைந்தது.

அதன்பிறகு நான்  ‘விழுதுகள்’ என்கிற  குறும்படத்தை  எழுதி இயக்கி நடித்து வெளியிட்டேன். தொடர்ந்து ஒரு சில குறும்படங்களிலும்  நடித்தேன். என்றாலும்  நாடகங்களில் நடிக்கின்றபோது கிடைக்கின்ற அந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் குறும்படங்களில் நடித்தபோது கிடைக்கவில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பாரதியார் பல்கலைக்கழக மாணவர் ரெங்கபாண்டி என்பவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். தங்கள் கல்லூரி மாணவர்களுக்கு நாடகப்பயிற்சிப் பட்டறை நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அங்கு சென்றபோதுதான்  நித்யானந்தம் என்கிற  ஆராய்ச்சி மாணவரைச் சந்தித்தேன். அர்ப்பணிப்போடு செயல்படும் அவர் அங்கு எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். பலகலைக் கழகத்தில்  MJMCயின் துறைத்தலைவர் திரு P.E. தாமஸ் அவர்களின் அன்பும் வரவேற்பும் அடுத்தடுத்த  நகர்வுகளுக்கு மிகப்பெரிய துணையாக  அமைந்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வரும் மாணவர்களுக்கு  நடிப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதோடு ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிப்பட்டறை முடிந்ததும் ஒரு நாடகத்தை நிகழ்த்தவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். எல்லா நிகழ்வுகளிலும் உடனிருந்து எனக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தார். அங்கேயிருக்கின்ற அழகான அந்த “ஆம்ப்பி தியேட்டரில்” நாடகம் நடத்துவதென்பதே  ஒவ்வொரு நாடகக் கலைஞனுக்கும் உற்சாகமூட்டும் ஒரு அனுபவம்.

முதல் ஆண்டு என்னுடைய ‘கயிறு’ என்கிற நாடகத்தையும் (அதே நாடகத்தை பூசாகோ கலைக்கல்லூரி ‘நிலாமுற்றத்திலும் நிகழ்த்தினோம்) இரண்டாம் ஆண்டு ‘ பீ ராஜா’ என்கிற  நாடகத்தையும் (அதே நாடகம் தமுஎகசவின் 200வது இலக்கியச் சந்திப்பிலும்) மூன்றாவது ஆண்டு ‘புவியரசு அண்ணா’ அவர்கள் எழுதின  “சாக்கடைக் குழியில்  ஒரு மனிதன்” என்கிற நாடகத்தையும்  நிகழ்த்தினோம்.  அதன் பிறகு பல்கலைக்கழக நாடகப் போட்டியில் மாணவர்கள் மீண்டும் “பீ ராஜா” நாடகத்தை நடத்தி சிறந்த நாடகத்திற்கான பரிசைப் பெற்றார்கள்.  எனக்கென தனியாக ஒரு குழு இல்லாத   காரணத்தால். ஒவ்வொரு முறையும் கிடைக்கும் புதிய மாணவர்களை வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு நாடகமும் நடத்தினேன்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘கொரோனா பெருந்தொற்று’ ஏற்பட்ட காரணத்தால் எல்லா இயக்கங்களும் முடங்கிக் கிடக்கின்றன. எல்லாம் மாறி இயல்பு நிலை ஏற்பட்டு மீண்டும் உங்களோடெல்லாம் ஒன்றாக இணைந்து நாடங்களை உருவாக்க வேண்டும் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.  இதுவரை  ஏறக்குறைய ஆயிரம் மாணவர்களுக்கு  நடிப்புப்பயிற்சி கொடுத்துள்ளேன். என்னிடம் பயின்ற மாணவர்கள் இப்போது பல்வேறு நாடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும்,  ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் செயல்பட்டு வருகின்றனர். ஹிந்துஸ்தான் கால்லூரியில் என்னிடம் பயின்ற மாணவர் ‘ஸ்யாம் சூர்யா’ என்பவர்  ‘அக்னி தேவி’ என்கிற படத்தை இயக்கினார். இப்போது தனது இரண்டாவது திரைப்படம் ‘ஃப்ரண்ட்ஷிப்’பை இயக்கியுள்ளார்.

இவ்வளவு மாணவர்கள் நடிப்புப் பயிற்சி பெற்று பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருந்தாலும், நாடத்திற்கான செயல்பாடுகளில் பங்கெடுப்பவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள் என்கிற  உண்மையையும் உங்களோடு வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால் நாடகத்திற்கு மிகுந்த உடல் உழைப்பு தேவைப்படுகிறது,  நாடகத்தில் நிறைய பணமும், பெரும் புகழும் சம்பாதிக்க முடியாது அல்லவா? பொருளைத் தேடி அலைகின்ற இன்றைய உலகில்  அர்ப்பணிப்போடும், கலை தாகத்தோடும் செயல்படத் தயாராக வருபவர்கள் அபூர்வமாகவே உள்ளனர்.

 நன்றி! வணக்கம்!!

ரவிச்சந்திரன் அரவிந்தன்